Tamil News
Home செய்திகள் பொது வேட்பளர் ஒருவரை நிறுத்தும் எண்ணம் கூட்டமைப்புக்கு இல்லை – துரைராஜசிங்கம்

பொது வேட்பளர் ஒருவரை நிறுத்தும் எண்ணம் கூட்டமைப்புக்கு இல்லை – துரைராஜசிங்கம்

வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிகின்றோம். எமது தலைவரையும் இது தொடர்பில் அணுகியிருப்பதாகவும் அறிகின்றோம். ஆனால் எங்களிடம் அவ்வாறான அபிப்பிராயம் இல்லை. அவ்வாறு நிறுத்துவதானது தோல்வியடையும் நிலையில் உள்ளவரை வெற்றியடையச்செய்யும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான க.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகத்தினைப்பொறுத்தவரையில் ஓரு வேட்பாளரை நிறுத்துவது என்பது உகந்தவிடயம் அல்ல எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய விடயங்கள் எழுத்துமூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில்

இணக்கப்பாடு ஏற்படும் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கியமான கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் கட்டுப்பணம் செலுத்தாமையினால் யார் வேட்பாளர்களாக வருவார்கள் என்ற தெளிவற்ற நிலையே தற்போதும் இருக்கின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் குறிப்பாக தமிழ் பேசும் மக்களைப் பொருத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோவொரு விதத்தில் விரும்பியோ விரும்பாமலே ஈடுபட்டே ஆக வேண்டும்.

எமது கட்சியைப் பொருத்தவரையில் நாங்கள் எல்லாத் தேர்தல்களிலும் விலயுறுத்துகின்ற எமது இனப்பிரச்சனை தொடர்பான தீர்வு என்கின்ற விடயம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கோரிக்கையாக இருக்கும்.

இதுவரை முக்கிய கட்சிகளின் வேட்பாளர் யார் என்று உத்தியோக பூர்வமாக முடிவுசெய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். எனினும் எமது மாவட்டக் கிளைகளைக் கூட்டி அந்த அந்த மாவட்டங்களில் எமது கட்சியினர் கொண்டிருக்கின்ற அபிப்பிராயங்கள் தொடர்பில் கருத்துக்களைச் சேகரிக்க இருகின்றோம். அதனைத் தொடர்ந்து எமது மத்தியகுழு கூடி இது தெடர்பில் நாங்கள் இறுதி முடிவு எடுப்போம்.

அதற்கு முன்பதாக முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் எவ்வாறு .இருக்கின்றது என்பது தொடர்பில் கூடுதல் அக்கறை கொள்வோம். தற்போது உத்தியோகபூர்வமற்றதாக இடம்பெறும் சந்திப்புக்களில் எமது நிலைப்பாடுகளைத் தெரிவித்து அதனைத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் உட்படுத்த முடியுமா என்பது தொடர்பிலும் ஆலோசனைகளும் வழங்கியிருக்கின்றோம்.

நாங்கள் கூறிய விடயங்கள் எவ்வாறாக தேர்தல் விஞ்ஞாபனங்களில் வரும் என்பது தொடர்பில் நாங்கள் அவதானிப்போம். மேலதிகமான பேச்சுவார்த்தைகள் தேவைப்படுமிடத்து அவர்கள் அழைக்கும் பட்சத்தில் அவர்களுடன் கதைத்து எமது தெளிவூட்டல்களைத் வெளிப்படுத்தியதன் பின்னர் எமது மத்திய குழுவில் இறுதி முடிவினை எடுப்போம். இந்த அடிப்படையிலே தான் எமது கட்சி இந்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றது.

இது இவ்வாறு இருக்க தற்போது வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிகின்றோம். எமது தலைவரையும் இது தொடர்பில் அணுகியிருப்பதாகவும் அறிகின்றோம். ஆனால் எங்களிடம் அவ்வாறான அபிப்பிராயம் இல்லை. இது முழுநாட்டுக்கும் பொதுவான ஒரு தேர்தல் என்ற வகையிலே சிறபான்மை மக்களின் பிரதிநிதிகள் வெல்லுவதற்கு நிச்சயமாக எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.

அவ்வாற சிறுபான்மை மக்களின் பிரதிநிதி என்று ஒருவரை இத்தேர்தலில் நிறுத்தவதென்பது ஏதோவொரு விதத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகமாகப் பெறக் கூடிய உறுப்பினருடைய வாக்குகளைச் சிதைத்து,சிறுபான்மை மக்களின் வாக்குகளால் வெல்ல முடியாத ஒருவரை வெல்ல வைக்கக் கூடிய வகையிலான நடவடிக்கையாகவே மக்கள் இதனைக் கருதுவார்கள்.

எனவே சிறுபான்மை வேட்பாளர் நிறுத்துவதென்பது ஆலோசனை அடிப்படையிலேயே இருக்கின்றது. அவ்வாறு ஆலோசனை செய்பவர்கள் ஏனைய சிவில் சமூகங்களினதும் பொது அமைப்புகளினதும் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எம்மைப் பொருத்தவரையில் மக்களின் இவ்வாறான அபிப்பிராயத்திலேயே நாங்களும் இருக்கின்றோம். பொதுவாக சிறுபான்மை மக்களில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதென்பது ஒரு உகந்த விடயமாக இருக்காது.

இலங்கையைப் பொருத்தமட்டில் தேர்தலுக்கு வருகின்ற ஒரு வேட்பாளர் இலங்கையினுடைய முந்திய பிந்திய அரசியல் நிலைமைகள் எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு வாக்குறுதியை வழங்குவதென்பது அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடும் என்கின்ற ஒரு அச்சம் எப்போதும் அவர்களுக்கு இருக்கின்றது.

எனவே அவர்கள் பகிரங்கமாக தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் சொல்ல மாட்டார்கள். இருந்த போதிலும் நாங்கள் அவர்களுடன் பல நிபந்தனைகள் தொடர்பில் கலந்துரையாடுவோம். எழுத்துமூலமான வாக்குறுதிகள் பெற வேண்டும் என்றொல்லாம் சொல்லப்படுகின்றது.

சாதாரணமாக தமிழ் மக்களின் கோரிக்கை எது என்பது பல எழுத்தாவணங்கள் மூலம் எம்மால் பல முக்கிய அரசியற் கட்சிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் எங்களுடன் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவார்கள். வேட்பாளர் மட்டுமல்ல அவரின் கட்சியினுடனும் நாங்கள் கலந்துரையாடுவோம். வேட்பாளர் சொல்வதை மட்டும் வைத்துக் கொண்டு நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதில்லை.

இது தற்போது பேசப்படுகின்ற விடயங்களை மாத்திரம் வைத்து தீர்மானிக்கப்படுகின்ற விடயமும் அல்ல. வரலாற்று அடிப்படையில் எமது தமிழ் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலே தான் எமது ஆதரவு இருக்கும். அதனை வலியுறுத்தி இவ்வாறுதான் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்ற நிலைமையை நாங்கள் தேவைக்கேற்ப தவிர்த்தும் கொள்வோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றது. இவை சரியான முடிவுகள் எட்டப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் அல்ல. ஆனால் அவரவர்களின் அபிப்பிராயங்களை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள். நாங்கள் அனைவரும் கூடி இறுதி முடிவினை எடுப்போம். தற்போது இருக்கின்ற விடயங்களின் அடிப்படையில் மக்களின் கருத்து வெளிப்பாடு அவ்வாறு இருப்பதன் காரணமாக இவ்வாறான வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எமது அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கின்றது. இவ்விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பதை எதிர்வரும் காலத்தில் தீர்மானிப்போம் என்று தெரிவித்தார்.

Exit mobile version