கொங்கோவில் ஆயுதக் குழுவின் தாக்குதலில்  100 கிராமவாசிகள் பலி: 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசிலுள்ள  (Democratic Republic of the Congo- DR Congo) கிராமமொன்றில் ஆயுதக் குழுவொன்றினால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று முதல் 3 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கீஷிஷே எனும் கிராமத்தில் எம் 23 (மார்ச் 23) எனும் ஆயுதக் குழுவினால் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 50 பேர் பலியானதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அந்நாட்டு அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

மார்ச் 23 இயக்கமானது  டுட்சி இன கிளர்ச்சியாளர்கள் குழுவாகும். இந்த இயக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் மீண்டும் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்ததுடன், உகண்டா எல்லையுள்ள புனாகனா நகரை கடந்த ஜூன் மாதம் கைப்பற்றியிருந்தது.

நவம்பர் 23 ஆம் திகதி இணக்கம் காணப்பட்ட போர் நிறுத்தத்தை இத்தாக்குதல் மீறுவதாக உள்ள என கொங்கோ ஜனநாயகக் குடியரசின் இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என எம்23 இயக்கம் மறுத்துள்ளதுடன், தான் பொதுமக்களை இலக்குவைக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

இதேவேளை இத்தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது. மேற்படி குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழான குற்றமாக அமையும் கொங்கோவிலுள்ள ஐ.நா சமாதானப் படை தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கொங்கோவுக்கான ஐநா சமாதானப் படை கோரியுள்ளது.