கௌரவமான அரசியல் தீர்வு கோரிய 100 நாள் போராட்டச் செயல்முனைவு

DSC 1230 1 கௌரவமான அரசியல் தீர்வு கோரிய 100 நாள் போராட்டச் செயல்முனைவு

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அந்தப் போராட்டங்களுக்கு இன்னும் முடிவேற்படவில்லை. அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் இறைமை சார்ந்த அவர்களது வாழ்வுரிமைகளை நிலைபேறான வகையில் நிலைநிறுத்துவதற்கான இந்த முயற்சி பல்வேறு தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் இதுவரையில் சந்தித்திருக்கின்றது. ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வேட்கை தீவிரமடைந்திருக்கின்றதே தவிர அது சோர்வடையவில்லை.

இந்தப் போராட்டத்தின் மற்றுமோர் அம்சமாக அரசியல் தீர்வு கோரிய 100 நாட்கள் முனைவு என்ற போராட்டம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் பட்டிதொட்டி எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்தப் போராட்டம் மன்னாரில் ஆரம்பமாகியது. தொடர்ந்து வடமாகாணத்தின் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரப்படுகின்றது.

எண்பது தொண்ணூறு நாட்கள் என அந்தப் போராட்டம் தனது இலக்காகிய 100 ஆவது நாளை நோக்கி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இநதப் போராட்டத்தின் மூலம் அடிமட்ட மக்களின் அரசியல் தீர்வுக்கான வேட்கையும் கோரிக்கையும் வலுவான முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை. அது முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் வடக்கு கிழக்கின் மூலை முடுக்கெங்கும் இந்தப் போராட்டத்தை எழுச்சி மிக்கதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தப் போராட்டத்தில் அடிமட்ட நிலையிலான மக்கள் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பவற்றுடன் மனித உரிமை மற்றும் ஜனநாயக, சமூகச் செயற்பாட்டாளர்களும் பின்னிப் பிணைந்து இந்தப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கின்றனர். இந்த 100 நாள் செயல்முனைவின் மூலம் தமிழ் மக்கள் எழுச்சி பெறுவதை அரசு விரும்பவில்லை. இதனையடுத்து, இந்தப் போராட்டங்களில் முன்னிலை வகித்தவர்களை இலக்கு வைத்து புலனாய்வுப் பிரிவினரும் காவல்துறையினருக்கு தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்களைப் பின்தொடர்வது, அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்கள் இல்லாத தருணங்களில் பெற்றோர், கணவன், மனைவி பிள்ளைகளை அச்சுறுத்துவது போன்ற கெடுபிடிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். வீடுகளில் தனிமையில் உள்ள குடும்ப உறவினர்களிடம், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள், அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதமில்லை என்ற வகையில் அச்சுறுத்தி உளவியல் ரீதியிலான பீதியை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை மக்களின் ஒன்று கூடலுக்கான சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடுகள் என்றும் இது ஜனநாயக உரிமைகளை அவமதித்து அவற்றை மறுக்கின்ற அடக்குமுறை நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சர்வதேசத்தினதும் உள்ளுர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களினதம் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆயினும் வழமை போலவே இத்தகைய உரிமை மீறல் விடயங்களை அரசாங்கம் கண்டு கொள்ளாத போக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கன்றது.

வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் உயிர் நாடியான கோரிக்கை. நாங்கள் நாட்டை துண்டாடவோ  தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் என்பது இந்தப் போராட்டத்தின் நிலைப்பாடாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமை. இதனடிப்படையில் 13 வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான உரிமையை உறுதிப்படுத்தி உள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்துக்கான கோரிக்கை இவற்றின் அடிப்படையில் இனங்காணப்பட வேண்டும்.

அது மட்டுமல்லாமல், எங்கள் நிலம் எமக்கு வேண்டும். சுதந்திரமான நடமாட்டம், பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுதல், மத வழிபாடு என்பன எங்களது அடிப்படை உரிமைகள். இந்த உரிமைகள் அரசியலமைப்பு ரீதியாகவும் சர்வதேச அளவிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு பிரகடன்பப் படுத்தப்பட்டவை. இவற்றை எவரும் மறுக்க முடியாது. எமது வாழ்வுரிமை சார்ந்த நில உரிமைகளினதும் எமது மதத் தலங்களினதும் புனிதத் தன்மையை அதிகாரத்தைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தக் கூடாது. ஆக்கிரமிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளும் இந்தப் போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றன.