இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான 03வது சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவு- அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வெளிப்படையான கடன் மறுசீரமைப்பு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (15) நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் தொகையை வழங்குவதில்லை என சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் தீர்மானிக்கவில்லை.

டிசம்பர் மாதத்தில் குறித்த கடன் தொகையை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே தாமதத்துக்கான காரணம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டிய விடயங்களை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் காலதாமதம் செய்து வருவதால், ஒப்புக்கொள்ளப்பட்ட கடன்கள் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என, ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நேற்று (15) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.