Home ஆய்வுகள் ஹூத்திகள்மீது அமெரிக்காவின் பயங்கரவாத முத்திரை – தமிழில் ஜெயந்திரன்

ஹூத்திகள்மீது அமெரிக்காவின் பயங்கரவாத முத்திரை – தமிழில் ஜெயந்திரன்

கடந்த ஜனவரி 10ம் திகதி, அமெரிக்காவின் அன்றைய இராசாங்க அமைச்சரான மைக் பொம்பெயோ (Mike Pompeo) வடயேமனை (North Yemen) தமது கட்டுப்பாட்டில் வைத்து, நடைமுறை அரசை (de facto state) நடத்தி வருகின்ற ஹ_த்தி (houthi) இனத்தைச் சார்ந்த இயக்கமாகிய அன்சார் அல்லா (Ansar Allah) தன் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்னும் நோக்கத்தோடு அதனை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியது போன்று, யேமனில் ஏற்கனவே நிலவுகின்ற மிக மோசமான மனிதாய நிலைமைகளை இந்த அறிவிப்பு மேலும் சிக்கலுக்குள்ளாக்கி, தற்போது அந்த நாட்டுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற உதவிகளை வழங்கும் செயற்பாடுகளை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருப்பது மட்டுமன்றி, அமைதியான வழிமுறைகளில் போரை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் குந்தகமாக அமைந்திருக்கிறது.

எந்தவொரு அடிப்படைக் கொள்கையுமின்றி, பயங்கரவாத முத்திரையை தமது அரசியலாக்கும் அமெரிக்காவின் இந்தப் போக்கும், இச்செயற்பாட்டைத் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிரான ஒரு போர்த்தந்திரமாகப்  பயன்படுத்தும் அமெரிக்காவின் அணுகுமுறையும் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற போதிலும், இவை பன்னாட்டுச் சமூகத்தினால் பொதுவாகக் கவனிக்கப்படாத விடயங்களாகவே இருந்துவருகின்றன. உண்மையான தரவுகளின் அடிப்படையில், பாரபட்சமின்றி பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை, பயங்கரவாதிகளாக அறிவிக்கும் செயற்பாடுகளில் அமெரிக்கா கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை இது கேள்விக்குரியதாக்குகின்றது. கடந்த ஆறு வருடங்களாக யேமன் நாட்டு மக்களின் வாழ்க்கையை தெரிந்துகொண்டே சீரழித்த ஒரு போர்க்குணம் கொண்ட நாடாக அமெரிக்கா தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது.

சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து, 2015 மார்ச் மாதத்தில் யேமன் மீது போர் தொடுத்ததிலிருந்து, இந்தப் போரில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருமே போரில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான முறையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது மிகக் குரூரமான தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் வாழும் பகுதிகளில் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்ளல், உணவு மற்றும் மருத்துவ உதவிகளைத் தடுத்தல், சிறுவர் போராளிகளைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக அன்சார் அல்லாவின் போர் விதிமீறல்கள் ஏற்கனவே நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

55fc1d2e f695 470a 8916 0008281698c8 ஹூத்திகள்மீது அமெரிக்காவின் பயங்கரவாத முத்திரை – தமிழில் ஜெயந்திரன்

அளவு, தீவிரத்தன்மை, மேற்கொள்ளப்பட்ட தடவைகள் என்று பார்க்கும் போது,  சவூதி-அமீரகக் கூட்டணியால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மிகவும் மோசமானவையாகும். அப்பாவி யேமன் பொதுமக்களைப் பீதிக்குள்ளாக்கும் வகையில் வேண்டுமென்றே அவர்கள் மேல் தொடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள், 112,000 சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பன இப்போர்க்குற்றங்களுக்குள் அடங்குகின்றன.

இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டில் (2016) எடுக்கப்பட்ட தரவுகளின் படி யேமனில் ஏற்படுத்தப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு கூட்டணியின் விமானத் தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்டவையாகும். மிகவும் பரவலான விதத்திலும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் யேமன் மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், திருமண நிகழ்வுகள், சாவு நிகழ்வுகள், மக்கள் அதிகமாக வாழுகின்ற பகுதிகள் என்பவற்றின் மீது அமெரிக்காவினால் வழங்கப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டணி தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தரைவழி, வான்வழி, கடல்வழிப்பாதைகள் முடக்கப்பட்டிருப்பதன் காரணமாக உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றை நாட்டுக்குள் இறக்குமதி செய்யும் செயற்பாட்டை முற்றிலும் மேற்கொள்ள முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதனால் யேமனை கூட்டணி மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இவற்றின் காரணமாக வரலாறு காணாத வகையில் பசியாலும், போதிய ஊட்டச்சத்தின்றியும், நோயினாலும் யேமன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரில் சவுதி அரேபியா-அமீரகக் கூட்டணி காட்டிவரும் பொறுப்பற்ற தன்மை, றியாத், அபுதாபி ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள், இலஞ்சங்கள் என்பவற்றுக்கு நடுவிலும் ஐக்கிய நாடுகள் மற்றும் உலகம் பூராவும் இருக்கின்ற பல அரசுகளின் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.

 

முன்னெடுக்கப்பட்ட இப்போரின் ஒரு தரப்பாக இருந்து, புலனாய்வு உதவி, எரிபொருள் நிரப்புதல் என்பவற்றுடன் சவூதி அரேபியா, அமீரகம் ஆகியவற்றுக்கு பல பில்லியன் டொலர்கள் பெறுமதிவாய்ந்த ஆயுதங்கள் வழங்குதல் போன்ற உதவிகளை வழங்கி, இப்போரில் அமெரிக்கா வகிக்கும் பங்கு என்பது யேமனில் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டுமன்றி உள்நாட்டில் பல சவால்களைத் தோற்றுவித்திருப்பதோடு அமெரிக்கா இழைத்திருக்கக்கூடிய போர்க்குற்றங்கள் தொடர்பான கவலையையும் தோற்றுவித்திருக்கிறது.

ஒபாமா காலத்தில் பணியாற்றிய 24க்கு மேற்பட்ட அதிகாரிகள் யேமன் போரிலே அமெரிக்கா தனது பங்கை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று கேட்கும் ஒரு கடிதத்தில் ஒப்பமிட்டிருந்தார்கள். இந்தப் போருக்குப் பச்சைக்கொடி காட்டியது தவறானது என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு செயற்பாடாக இது அமைந்திருந்தது. அமெரிக்க நாடாளுமன்றமும் இப்போரில் அமெரிக்கா தனது பங்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் சவூதி அரேபியாவுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரியும் பல்வேறு தீர்மானங்களை இயற்றியிருந்தது. ஆனால் முன்னைய அதிபர் ட்ரம்ப் தமக்கிருந்த வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இவற்றைத் தக்க வைத்திருந்தார்.

யேமன் போர் தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தில் ஒப்பமிட்ட அன்ரனி பிளிங்கன் (Antony Blinken)இ வென்டி ஷேர்மன் (Wendy Sherman)இ ஜேக் சளிவன் ((Jake Sullivan)

போன்றவர்களைத் தனது உதவியாளர்களாகக் கொண்டிருக்கும் அதிபர் ஜோ பைடன், தான் ஏற்கனவே வாக்குறுதி அளித்தது போன்று சவூதி அரேபியாவுக்கான ஆயுத விற்பனையையும் யேமன் போரிலே தமது பங்கையும் முடிவுக்குக் கொண்டு வருவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

யேமனில் குண்டுகளை வீசுவதற்கு பல பில்லியன்களைச் செலவழித்த போதிலும் சவூதி அரேபியாவினாலும் ஐக்கிய அரபு அமீரகத்தாலும் அன்சார் அல்லா அமைப்பைத் தோற்கடிக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிப்பதைத் தூண்டும் விதத்தில் அன்சார் அல்லாவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் படி இந்த இரு நாடுகளும் அமெரிக்க அரசாங்க அமைச்சில் பரப்புரை செய்து வந்திருக்கின்றன. ஈரான், வெனிசுவேலா, கியூபா போன்ற நாடுகளின் மீது பயங்கரவாத முத்திரை குத்தி அவற்றின் மேல் பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்தியது போன்று, அன்சார் அல்லாவையும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்க அரசாங்க அமைச்சின் செயற்பாடு, களத்திலுள்ள தரவுகளின் பாரபட்சமற்ற மதிப்பீட்டையோ அன்றேல் இப்படிப்பட்ட கொள்கையின் நன்மை தீமைகளையோ பிரதிபலிக்கவில்லை.

இதற்கு மாறாக, தமது கோரிக்கைகளுக்கு அடிபணிந்து அதிகாரத்திலிருந்து வெளியேறுவார்கள் என்னும் நோக்குடன், போரிலே பயன்படுத்தப்படும் ஒரு பொருண்மிய ஆயுதமாக இந்த அணுகுமுறை அமெரிக்காவினால் கையாளப்படுகிறது. இவ்வாறாக இலக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு அரசுமே இன்னும் அதிகாரத்தில் நிலைத்து நிற்கின்றது என்பதற்கப்பால் விதிக்கப்படும் பொருண்மியத் தடைகள், தமது அரசுகள் மேற்கொள்ளுகின்ற அல்லது மேற்கொள்ளத் தவறுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக எந்தவித தாக்கமும் செலுத்த முடியாத அப்பாவிப் பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையையே அதிகம் பாதிக்கின்றது என்பதே இங்கு வெளிப்படும் உண்மையாகும்.

நன்றி: அல்ஜசீரா

Exit mobile version