ஸ்ரீலங்காவில் மயங்கி விழுந்த மாணவி! கொரோனா அச்சத்தில் அருகில் நெருங்காத ஆசிரியர்கள்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் சுவாச கோளாறுக்கு உள்ளான மாணவி ஒருவரை வைத்தியசாலையில் சேர்ப்பிப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எவரும் முன்வராத சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவி பாடசாலைக்கு சமூகமளித்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலில் திடீரென சுகயீனமடைந்துள்ளதோடு சுவாசிக்கவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் 1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி சுவசெரிய நோயாளர் காவு வண்டியினை வரவழைத்துள்ளனர்.

நோயாளர் காவு வண்டி பாடசாலைக்குள் வருகை தந்ததும் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வது யார் என்பது குறித்து ஆசிரியர்கள் பின்வாங்கியுள்ளனர்.

உலகையே தற்போது கொரோன வைரஸ் அச்சுறுத்திவரும் நிலையில் ஸ்ரீலங்காவிலும் இரண்டு சீன பெண்கள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் கொண்ட ஆசிரியர்கள் மாணவியின் அருகிலும் செல்லாமல் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு காத்திருந்துள்ளனர்.

இவ்வாறிருக்க மாணவியை நோயாளர் காவு வண்டிக்கு ஏற்றி அமரச்செய்யவும் எந்த தரப்பும் முன்வரவில்லை என்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரும் முன்வராத இந்த சந்தர்ப்பத்தில் நோயாளர் காவு வாகனத்தின் சாரதி தானே முன்வந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சேர்ப்பித்துள்ளார்.

இதன்பின்னர் ஆசிரியை ஒருவர் குறித்த வாகனத்தில் மாணவியை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்க அவருடன் சென்றுள்ளார்.

குறித்த மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும் அவர் சுவாசக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளதோடு, மாணவிக்கான சுவாச மட்டம் மிக குறைந்தளவிலேயே காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 10 நிமிடங்கள் தாமதித்திருந்தால் மாணவி உயிரிழந்திருப்பாள் எனவும் தெரிவித்துள்ளனர்.