வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: டெல்லி எல்லையில் வீடுகளைக் கட்டும்  விவசாயிகள்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளும் அவர்களது உறவினர்களும் போராட்டக் களத்திற்கு அருகில் செங்கல் கொண்டு வீடுகளை கட்டத் தொடங்கியுள்ளனர்.

இனி வரவுள்ள கோடைக்காலத்தை சமாளிப்பதற்காகவும் இப்போராட்டத்தை நீண்ட காலத்துக்கு நடத்தும் நோக்கிலும், விவசாயிகள் இந்த வீடுகளை கட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி திக்ரி எல்லையில் கட்டப்படுகிற முதல் செங்கற்கல் வீட்டை பற்றி அதன் உரிமையாளரான ரோஹ்தாஷ் கில், “ வீட்டு ஜன்னலில் பச்சை கிளி பொம்பை ஒன்றை கட்டுவோம். எங்கள் கிராமங்களில் அது பாரம்பரிய பழக்கம். சுமார் 10-12 பேர் சேர்ந்து இரண்டு நாட்களில் இந்த வீட்டைக் கட்டினோம்” என்றார்.

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ட்ராக்டர் பேரணி, சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.