Tamil News
Home செய்திகள் வேலன் சுவாமிகளை பொது வேட்பாளராக ஏற்கமுடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில்

வேலன் சுவாமிகளை பொது வேட்பாளராக ஏற்கமுடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில்

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் பொது முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமிகளை நிறுத்தலாமென க.வி.விக்னேஸ்வரன் கூறியிருப்பது அவரது சொந்தக்கருத்து. எனினும், வடக்கு-கிழக்கில் நிர்வாக ஆளுமையும், நடைமுறை அரசியலை கையாள தெரிந்த ஒருவருமே முதலமைச்சர் வேட்பாளராக வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பொது முதலமைச்சர் வேட்பாளராக வேலன் சுவாமிகளை களமிறக்கலாமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் என்.சிறிகாந்தாவை தொடர்பு கொண்டு வினவிய போதே, இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் வாழ்வும், வாழ்விடமும் தொடர்ந்தும் பாரிய சவால்களுக்கும், நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழ் தேசிய சக்திகள் அனைத்தும் ஒரு பொதுவான அரசியல் செயல்திட்டத்தின் அடிப்படையில் ஓரணி திரண்டு, ஒற்றுமையுடன் செயற்படுவதே இன்றைய அவசர, அவசிய தேவையாக உள்ளது.

இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலை பற்றி திட்டவட்டமாக இப்பொழுது எதையும் தமிழர் தரப்பிலிருந்து இப்பொழுது கூற முடியாதுள்ளது. முதலில் தேர்தல்கள் நடத்துவது தொடர்பில் அரசு ஒரு முடிவுக்கு வரவேண்டும். அடுத்தது, தேர்தல் முறை மாற்றமென்ற பெயரில் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தாமல், மிக விரைவாக தேர்தலை நடத்தவேண்டும்.

இது இரண்டும், இன்று பதில்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேள்விகளாகும். தேர்தல் அறிவிக்கப்படும் போது. அது தொடர்பில் தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து செயற்படுவது பற்றி நாம் பேசி ஒரு முடிவுக்கு வர முடியும். மாகாணசபை முறைமை என்பது, அது கொண்டு வரப்பட்ட 1987ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகிவருகிறது. மாகாணசபையின் அதிகாரங்கள் மெல்லமெல்ல, அதேநேரம் உறுதியாக அரித்து எடுக்கப்படுகிறது.

எம்மை பொறுத்தவரை 13ஆவது அரசியல் திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் அவற்றுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டு மென்பதில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் திட்டவட்டமாகவும் உறுதியாகவும் நிற்கவேண்டும். மாகாணசபை முறைமை என்பது தமிழினத்தின் அபிலாசைகளுக்கான தீர்வு அல்ல. ஆனால் அது ஒரு திட்டவட்டமாக ஆரம்பம். இருளில் சிக்கிக் கொண்டுள்ள ஓர் இனம் என்ற முறையில், வானத்து நிலவினை வரவேற்க காத்துக் கொண்டிருக்காமல், உடனடியாக கையிலுள்ள மெழுகுவர்த்திகளையாவது எரிய வைக்க நாம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

தூர சிந்தனையுடனும், நடைமுறை சாத்தியமான அரசியல் அணுகுமுறையுடனும், கடந்த காலங்களில் 70 ஆண்டுகளிற்கு மேலாக சிந்தித்து செயல்பட காலத்திற்கு காலம் வந்த தமிழ் அரசியல் தலைமைகள் செயற்பட தவறியதால் தான், இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென்பதை நாம் ஏற்க வேண்டும். அதேநேரம் கடந்தகால தலைமைகளை குறைகூறிக்கொண்டிருக்கின்ற நாம் அனைவரும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மனச்சாட்சியை தொட்டு சிந்திக்க வேண்டும்.

மாகாணசபை தேர்தல் என சிந்திக்கும்போது, கிழக்கு மாகாணம் தொடர்பிலேயே நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். வடக்கை விட கிழக்கில் பாரிய பிரச்னைகள் வேறுவேறு ரூபங்களில் எழுந்துள்ளன. எனவே, தமிழ் தேசியக் கட்சிகள் ஒரு பொது அரசியல் செயற்திட்டத்தின் அடிப்படையில், எமது சுயநிர்ணய அடிப்படையில் எமது அரசியல் தீர்வை தொடர்ந்த வலியுறுத்திக்கொண்டு வருகின்ற அதேவேளையில், மாகாணசபை முறையை முழுமையாகவும், உடனடியாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதை அழுத்தம் திருத்தமாக இலங்கை அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும், இலங்கை பிரச்னையில் ஈடுபாடு காட்டும் வெளிநாட்டு தரப்பிற்கும் நாம்சொல்ல வேண்டும்.

க.வி.விக்னேஸ்வரன் சொல்லியிருப்பது அவரது சொந்தக்கருத்து. அவருக்குரிய மதிப்போடு, அதை விமர்சனத்திற்குட்படுத்த விரும்பவில்லை. அது தேவையற்றது. தனது மனதில் பட்டதை அவர் கூறியிருக்கிறார். ஆனால், ஒரு விடயத்தை நான் தெளிவாக கூறிவைக்க விரும்புகிறேன். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அளவிலிருந்து ஒரு பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதாக இருந்தால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எங்கள் மத்தியில் ஆட்களுக்கு பஞ்சமில்லை. அந்த வாய்ப்பளிக்கப்பட்டால் வேண்டாம் என கூறும் மனநிலையில் எங்களில் எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் தமது மனச்சாட்சியில் கைவைத்து பார்த்தால் தெரியும்.

ஆனால், தனிமனித அபிலாசைகள் தொடர்பில் நான் எதையும் கூற முடியாது. ஆனால் அதேநேரத்தில் இந்த மாகாணசபை முறைமை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியுமானால், அப்போது நிர்வாக திறமையும், நடைமுறை அரசியலை கையாள தெரிந்தஆளுமையும் கொண்டவர்களைத்தான் வடக்கிலும், கிழக்கிலும் நாம் முதலமைச்சர் வேட்பாளராக்க வேண்டும். இன்று தேவைப்படுவது, நாம் எல்லோரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுசேர முடியுமா என்பதுதான். முதலில் அந்தக் கேள்விக்கு விடை காணவேண்டும்.

விக்னேஸ்வரன் கூறிய கருத்தை விமர்சனங்களுக்கு உள்ளாக்காமல், அது அவருடைய கருத்து. அதை சொல்ல அவருக்கு உரிமையுண்டு. அவர் தனது மனதில் பட்டதை கூறியிருக்கிறார் என்று நோக்க வேண்டும். தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை இது தொடர்பில் கருத்துக் கூறி ஏற்படுத்தக்கூடாது. அது ஆக்கபூர்வமானதல்ல” என்றார்.

Exit mobile version