வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் அதிபர் ட்ரம்ப்  

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு மக்கள் வாக்காளர் குழு வாக்களித்தால்,   வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 3-ம் திகதி நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன், 306 இடங்களில் வென்ற நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 232 இடங்களை பெற்றார்.

ஆனால், தற்போது வரை அதிபர் தேர்தல் தோல்வியை,   ஒப்புக் கொள்ள ட்ரம்ப் மறுத்து வருகிறார்.  மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வழக்குகளை தொடர்ந்துள்ளது அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி.

மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறார், டிரம்ப்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 26), டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில், அமெரிக்க இராணுவ வீரர்களுக்கான பாரம்பரிய நன்றி  தெரிவிப்பு தினத்தை முன்னிட்டு, நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கையில், “ஜோ பைடனுக்கு மக்கள் வாக்காளர் குழு (எலக்ட்ரோல் காலேஜ்) உறுப்பினர்கள் வாக்களித்து, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அளித்தால், நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்.” என்று கூறியுள்ளார்.