வீரவசனம் பேசிய அரசு இப்போது ஐ.நா.வுக்கு அடிபணிந்துவிட்டது – ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து விலகிவிட்டோம் எனவும் எனவும் இலங்கையை ஐ.நா. மிரட்ட முடியாது எனவும் வாய்ச்சவடால் விட்ட கோட்டாபய அரசு, இன்று போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்காக மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்துள்ளது. ஆரம்பத்தில் வீரவசனம் பேசிய அரசு, தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்தமை ஐ.நாவுக்கு அடிபணிந்தமைக்கு ஒப்பானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தப் புதிய ஆணைக்குழு இம்முறை ஐ.நாவின் பிடியிலிருந்து தப்பும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அமைக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்கின்றோம் என்ற பெயரில் காலத்தைக் கடத்தும் நோக்கிலும் புதிய ஆணைக்குழுவை இந்த அரசு நிறுவியிருக்கக்கூடும்.

எனினும், நாட்டையும் மக்களையும் ஏமாற்றுவது போல் ஐ.நாவையோ அல்லது சர்வதேச சமூகத்தையே இந்த அரசு ஏமாற்ற முடியாது. ஐ.நாவின் உறுப்புரிமை நாடான இலங்கை, மனித உரிமைகள் சபையின் கொள்கைகளை மீறிச் செயற்பட முடியாது” என்றார்.