வீதியில் சென்றவரை அழைத்து வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டார் – சம்பவத்தினை நேரில் கண்டவர்

வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் அழைத்தே அவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தியதாக சம்பவத்தினை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு,ஊறணி,மன்றேசா வீதியில் உள்ள அமைச்சர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

மெய்பாதுகாவலருக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து மெய்பாதுகாவரால் குறித்த குடும்பஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சின்ன ஊறணியை சேர்ந்த 35வயதான மகாலிங்கம் பாலசுந்தரன் என்பவரே உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிசூடு நடாத்திய மெய்பாதுகாவலர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிசூடு நடாத்திய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினர்,குற்றத்தடவியல் பிரிவினர்,புலனாய்வுத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதன்போது குறித்த பகுதிக்கு செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

IMG 0127 வீதியில் சென்றவரை அழைத்து வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டார் – சம்பவத்தினை நேரில் கண்டவர்

தாங்கள் மன்ரேசா வீதியில் உள்ள வீடு ஒன்றில் காசு வாங்கிவிட்டு முச்சக்கர வண்டியில் செல்லும்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக மரத்தின் கீழ் இருந்த மெய்பாதுகாவலர் குறித்த நபரை அழைத்ததாகவும்  பின் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் திடீர் என மெய்பாதுகாவலர் இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து குறித்த நபரின் தலை மீது சுட்டதாகவும் உயிரிழந்த நபருடன் சென்றவர் தெரிவித்துள்ளார்.

மண் ஏற்றிச்செல்லும் வாகனத்தின் சாரதியாக கடமையாற்றும் உயிரிழந்தவர்,கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக தனது வாகனத்துடன் வந்தபோது இராஜாங்க அமைச்சரின் வாகனங்கள் வீதியை மறித்து நின்றுள்ளது. இதையடுத்து வாகனங்களை வீதியோரத்தில் நிறுத்துமாறு உயிரிழந்தவர் கூறிய நிலையில் அங்கு வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.