விவசாயிகள் போராட்டம் – எல்லைகளில் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

காஸிபூர், சிங்கு மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் மூன்று எல்லைகளையும் காவல்துறை அடைத்துள்ளது.

மேலும் காஸிபூர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நடக்கும் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்துச் சாலைகளும் பல அடுக்குத் தடுப்புகளால் மூடப்பட்டுள்ளன. நடைபாதைகள் கூட மூடப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், பல சுற்றுப் பேச்சுக்கள் மத்திய அரசுடன் நடத்தப்பட்டு எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இதையடுத்து டிராக்டர்  பேரணியும் இந்திய குடியரசு தினத்தன்று நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை முதல், காஸிபூர், சிங்கு மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் மூன்று எல்லைகளையும் அடைத்து, காவல் துறை தடுப்புகளை வைத்துள்ளது. இதனால் எல்லைகளில் மிகுந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் “அமைதியாக எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அமர்ந்திருக்கிறோம். இது தொடரும். ஆனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைக்க நாங்கள் முன்னேறிச் செல்ல விரும்பினால், இந்த தடுப்புகள் எங்களைத் தடுக்காது. எங்கள் விஷயத்தில் அரசாங்கம் சதி செய்கிறது.

விவசாயிகள் போராட்டக் களப்பகுதியில் பிப்ரவரி 2ம் திகதி நள்ளிரவுவரை இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான தகவல்களைக் கூட எங்களால் வழங்க முடியவில்லை. இப்போது விவசாயிகள் போராட்ட இயக்கத்தின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தில் எங்கள் குரல் அடக்கப்படுகிறது. இது ஒரு வழியில், ஜனநாயகப் படுகொலை. ஆனால், இந்த அழுத்தங்கள் அனைத்தையும் மீறி, நாங்கள் உறுதியாக நிற்போம், எங்கள் போராட்டம் தொடரும்” விவசாயிகள் அறிவித்துள்ளன.