விளையாட்டு ரசிகர்களை கொடுரமாக தாக்கிய ஸ்ரீலங்கா இராணுவம்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நேற்று நடந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது பதற்ற நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மைதானத்திற்குள் செல்ல ரிக்கெட் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது.

பெருமளவு ரசிகர்கள் குழப்ப நிலையை ஏற்படுத்தியமையினால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

இதன்போது கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவம் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவத்தினர் பார்வையாளர்களை துரத்தி துரத்தி தாக்குவதனை அவதானிக்க முடிந்த நிலையில், “ஐயோ தாக்காதீர்கள் கடவுளே” என பார்வையாளர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

தேசிய கொடியுடன் முகத்தில் நாட்டின் கொடியை வரைந்து கொண்டு இலங்கை அணியை உற்சாகப்படுத்த சென்ற ரசிகர்களை இராணுவத்தினர் துரத்தி துரத்தி அடிப்பது யாருக்கு பெருமை? என தென்னிலங்கை ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முப்படையினரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பமானது. இவ்வாறான அசம்பாவிதங்கள் வீதி போக்குவரத்து நடவடிக்கையிலும் ஏற்படும் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜபக்ஷர்களின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொந்தப் பகுதியிலேயே இராணுவத்தினர் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டமை குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.