விடுதலை உணர்வின் ஆண்டான 2021 இல் விடுதலை உணர்வுடைய கூட்டுத்தலைமை அவசியம்

2020ஆம் ஆண்டு உலக நாடுகளை கொரோனா தொற்று செயலிழக்க வைத்த நிலையில்,  கொரோனா வீரியிலிருந்து விட்டு விலகும் விடுதலை உணர்வு மூலம் மனிதம் வாழ்வு பெற வைக்கும் ஆண்டாக 2021 ஐ அமைக்க உலக நாடுகள் அனைத்தும் தம்மாலான முயற்சிகளில் இறங்கியுள்ளன. மனித விடுதலை உணர்வே மனித வாழ்வின் உயிர்ப்புக்கான அடிப்படையாக அமையப் போகிறது.

பாராளுமன்ற சனநாயகத்தின் தாய் எனப்படும் ஐக்கிய அரசில் இறைமை இழப்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையைக் கருதி, அதிலிருந்து விட்டு விலகல்  என்னும் விடுதலை உணர்வின் வழி தங்களின் இறைமையுடன் கூடிய வளர்ச்சியை முன் எடுக்க முடியும் என்னும் மன உறுதியே 31.12.2020 இரவு 11.00 மணியுடன் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விட்டு விலக வைத்துள்ளது. இங்கும் விடுதலை உணர்வுதான் பிரித்தானியாவின் நம்பிக்கையாக அமைகிறது.  ஸ்கொட்லாந்து தலைமைகள் தாங்கள் ஐக்கிய அரசு என்னும் கட்டமைப்பில் இருந்து குடியொப்பத்தால் விலகி ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவோம் எனவும் வெளிப்படையாகக் கூறி விட்டு விலகலை விடுதலை உணர்வின் செயற்பாடாகவே பேசியும் வருகின்றனர்.

உலகின் வல்லாண்மைகளில் முக்கியமான அமெரிக்காவில் 20.01.2021 இல் ட்ரம்பின் மக்கள் நலத்திற்கு எதிரான ஆட்சியிலிருந்து விட்டு விலக வேண்டும் என்னும் விடுதலை உணர்வால் பைடன் தலைமையிலான புதிய ஆட்சி மூலம் தங்களுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே புதிய ஒழுங்குமுறையொன்றைத் தோற்றுவிக்கும் ஆண்டாக 2021 ஐ அமெரிக்க மக்கள் அமைத்துள்ளனர். இங்கும் விடுதலை உணர்வுதான் அமெரிக்காவின் அரசியலையும் உலகில் அதன் நிலையையும் மீள் உறுதி செய்யப் போகிறது.

இந்தியா, சீனா உருவாக்கிய தென்கிழக்காசிய ஆசிய நாடுகளை உள்ளடக்கிய பொருளாதாரக் கட்டமைப்புக்களுள் அடங்காது விட்டு விலகி விடுதலை உணர்வுடன் தனக்கான தனித்துவத்துடன் இந்துமா கடலை அமைதிக் கடலாக அமைக்கும் முயற்சிகளில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் ஆண்டாக 2021 அமையப் போகிறது.

இவ்வாறாக 2021 உலகெங்கும் விடுதலை உணர்வின் வழி மக்கள் தங்கள் வாழ்வையும், தங்கள் நாடுகளின் ஆட்சிகளையும் மீள் கட்டமைக்கும் ஆண்டாக 2021 ஐ உலகு காணப் போகிறது. இந்த விடுதலை உணர்வை சனநாயக பங்களிப்பின் ஒரு அங்கமாகவே உலகம் பார்க்கின்றதே தவிர, நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது பயங்கரவாதம் என்றெல்லாம் கருதவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்கும் எதிரான பயங்கரவாதக் குற்றச் செயலாகவும் தண்டிக்க முற்படவுமில்லை. மக்களின் உண்மையான அரசியல் தலைவர்களும் எவ்வித அச்சமுமின்றி தங்கள் அடிப்படை மனித உரிமையான தன்னாட்சியின் ஒரு அங்கமாகவே விட்டு விலகி விடுதலை பெறும் உரிமையைப் பேசியும் செயற்படுத்தியும் வருகின்றனர்.

ஆனால் விட்டு விலகும் விடுதலை உணர்வைப் பயன்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க இன்றைய ஈழத்தமிழ்த் தலைவர்கள் அஞ்சுகின்றனர். இந்த அச்சத்தை 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. இரா. சம்பந்தன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்து தெளிவாக எடுத்துரைக்கிறது. நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உட்பட்ட அரசியல் தீர்வொன்றையே தாங்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் பெற விரும்பி அதற்கேற்ற முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை சிறீலங்காவின் ஒரு நாடு ஒரு இனம் என்னும் சர்வாதிகாரப் பிரகடனத்தை ஏற்கும் உண்மையற்ற நேர்மையுமற்ற செயலாக அமைகிறது.

அதே வேளை சிறீலங்கா கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை சாட்டாக வைத்து 25 இராணுவ அதிகாரிகளை துன்பப்பட்ட மக்களின் நோய்த்தடுப்பு நோய்ச் சிகிச்சை முறைகளைக் கையாளும் இணைப்பு அதிகாரிகளாக நியமித்து 2021ஐ 2020இல் தான் தொடங்கிய இராணுவத் துணையுடனான சர்வாதிகார ஆட்சியை முழுமையாக்கும் செயலில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களிடை விடுதலை உணர்வுள்ளவர்களின் கூட்டுத்தலைமை ஒன்று 2021இல் உருவாக்கப்பட்டாலே, ஈழத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதே இவ்வாண்டில் ஈழத்தமிழர்கள் குடிமையை அடிமைப்படுத்தி ஒரு நாடு ஒரு இனம் என்னும் அரசியலமைப்பை உருவாக்கும் சிறீலங்காவின் முயற்சியையும், புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி இளைய சமுதாயத்தையே மூளைச் சலவை செய்ய முயலும் அமைச்சர் பீரிசின் நரித்தந்திரோபாயத்தையும் எதிர்ப்பதற்கான உறுதியை ஈழத்தமிழர்களுக்குத் தரும் என்பதே இலக்கின் முடிவான கருத்தாக உள்ளது. உலகத் தமிழர்கள் விடுதலை உணர்வுள்ள ஈழத்தமிழ்த் தலைமைகளை இனங்கண்டு அவர்களாலான கூட்டுத் தலைமை உருவாக இயன்றவு உழைக்க இவ்வாண்டில் உறுதி பூண வேண்டும்.