Tamil News
Home செய்திகள் ‘தமிழர்களின் குரலாக இருந்தவர் மறைந்த மன்னார் ஆயர்’ – தமிழ் சிவில் சமூக அமையம்  

‘தமிழர்களின் குரலாக இருந்தவர் மறைந்த மன்னார் ஆயர்’ – தமிழ் சிவில் சமூக அமையம்  

மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை விடுதலை இறையியல் தத்துவார்த்தத்தை தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார் என தமிழ் சிவில் சமூக அமையம்  விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் தோற்றுனர்களில் ஒருவரும் அதன் முதல் அமைப்பாளருமான மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி. இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவை ஒட்டி  தமிழ் சிவில் சமூக அமையம்   இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில்,“23 வருடங்கள் கத்தோலிக்க திருச்சபையின் மன்னார் மறை ஆயராகவும் பல தசாப்த காலங்களாக தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் தன்னலமற்ற அருஞ் சேவையாற்றிய மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் கட்சி அரசியலுக்கும், சமயத்துக்கும் அப்பால் கடந்த இரண்டு தசாபதங்களாக தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும் நீதிக்காகவும் நாளாந்த உரிமைகளுக்காவும் குரல் கொடுத்தவர்களில் தலையானவர்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் தோற்றுனர்களில் ஒருவரும் அதன் முதல் அழைப்பாளருமான ஆயர் இராயப்பு ஜோசப்பின் இழப்பு எமக்கும் தமிழ்த் தேசத்திற்கும் ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும்.

தனது ஆயர் பணியின் பெரும் பகுதியினை யுத்தத்திற்கு மத்தியில் ஆற்றிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அப்போது இடம் பெற்ற கொடுமைகள் தொடர்பாக அஞ்சாமல் குரல் கொடுத்த அதே வேளை  அந்நேரத்தில் தனது அருட் பணி மூலமாக பலருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் உதவியும் செய்தார்.

குறிப்பாக யுத்தத்தின் பின்னர் நிலவிய பயங்கரமான சூழலில் தமிழ் மக்களின் குரலாக மிகுந்த துணிச்சலுடன் அவர்களின் துயரை வெளிக் கொணரும் பணியில் ஆயர் தனது சேவையை வழங்கினார்.

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மையபீடத்தில் இருந்து வந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாது  தமிழ் மக்களின் விடுதலையை தனது இறையியல் சம்பந்தமான விளங்கிக் கொள்ளல்களோடு சேர்த்து நோக்கி மக்களின் சார்பில் குரல் தந்தவர்  இராயப்பு ஜோசப் ஆண்டகை.

ஒரு வகையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை விடுதலை இறையியல் தத்துவார்த்தத்தை தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார் எனக் கூடக்  கூறலாம்.  இந்த நிலைப்பாடு காரணமாக அவருக்கெதிராக அரச இயந்திரம் குறிப்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஊடாக பல விசாரணைகளை முடுக்கி விட்டது. அவரை பயங்கரவாதி என்றும் நாமம் சூட்டியது. அவற்றை பொருட்படுத்தாது தொடர்ந்து மக்கள் பணி ஆற்றினார்.

2012 இல் வழங்கிய பேட்டியொன்றில் ‘சர்ச்சைக்குரிய ஆயர்’ என அவர் சிலரால் அழைக்கப்படுவது பற்றி கேட்கப்பட்ட போது ‘இங்கு சர்ச்சைக்குரிய விடயங்கள் நடக்கின்றன. அவற்றை பற்றி பேச நான் துணிவதாலேயே சர்ச்சைக்குரிய ஆயர் என்று அழைக்கப்படுகிறேன்’ என உறுதியாக ஜோசப் ஆண்டகை பதில் கூறியமை அவரின் மனவலிமைக்கு சான்றாகின்றது.

ஜனவரி 2011 இல் இலங்கை அரசாங்கத்தின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான   ஆணைக்குழுவின் முன் தோன்றிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை இறுதி யுத்தத்தில் 146, 479 தமிழர்களின் நிலை தொடர்பில் பொறுப்புக் கூறப் பட வேண்டும் என்ற பதிவொன்றை செய்தார்.  தமிழ் மக்களுடைய நீதிக்கான போராட்டத்தில் இந்த பதிவு முக்கியமான முதல் மைல் கல்லாக இருந்தது.

2012 ஒக்டோபரில் இணையம் ஊடாக ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பருவகால மனித உரிமைகள் தொடர்பிலான மதிப்பீடொன்றின் (Universal Periodic Review) போதான துணை மாநாட்டில் உரையாற்றிய ஜோசப் ஆண்டகை தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தீர்வாகாது என்றும் தமிழர்கள் ஒரு தேசம் என்ற வகையில் அவர்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் தீர்வே நிலைத்த தீர்வாக இருக்கும் என வலியுறுத்தினார். இதே விடயத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜோசப் ஆண்டகை மீள மீள வலியுறுத்தியுள்ளார். தமிழ் தேசிய அரசியலில் பிரியாணிக்கும் காட்சிகளை ஒரு குறைந்த பட்ச நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிற்குள் ஒன்றிணைப்பதற்கு ஆயர் தன்னாலான பல முயற்சிகளை தமிழ் சிவில் சமூக அமையம் மூலமாக எடுத்தார்.

2013 மற்றும் 2014இல் பல நூற்றுக்கணக்கான கத்தோலிக்க பாதிரிமார்களை ஒருங்கிணைத்து சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடிதம் எழுதினார். தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடாக சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தும் பல்வேறு பணிகளும் அவரது தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டன. அரசியல் தீர்வு தொடர்பிலும் தெளிவான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அமையத்தின் செயற்பாடுகள் ஊடாக ஆயர் அவர்கள் தமிழ் அரசியல் பரப்பில் எடுத்தியம்பினார். தமிழர்களின் அரசியல் தலைமைத்துவம் மக்களிற்கு தேர்தல்களின் போது  வழங்கும் வாக்குறுதிகளின் படி செயற்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 2014 இல் காணாமல் போனோர் ஆணைக்குழுவின் அழைப்பைத் தொடர்ந்து அவர்கள் முன் மன்னாரில் தோன்றிய இராயப்பு ஜோசப் அவர்கள் உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கையில்லை என்பதை நீண்ட விளக்கம் ஒன்றை எழுத்து மூலம் வழங்கிய பின் சாட்சியமளிக்க  மறுத்து வெளியேறினார்.  அவரால் அச்சந்தர்ப்பத்தில் கையளிக்கப்பட்ட கடிதம் ஐ. நா மனித உரிமை ஆணையாளரால் இலங்கை தொடர்பாக வழங்கப்பட்ட வாய்மொழி மூல அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2015 சனவரியில் மன்னார் ஆயர் என்ற வகையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மன்னாருக்கு வரவேற்றார். அங்கு ஆயர் ஜோசப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருத்தந்தை பொறுப்புக் கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய உரையாற்றினார்.

மே 2015 இல் துரத்திட்டவசமாக  சுகவீனமுற்ற இராயப்பு ஜோசப் ஆண்டகை நீண்ட கால சிகிச்சைக்கு பின் 2015 டிசம்பரில் சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பி அதன் பின்னர் 14 ஜனவரி 2016 அன்று அவரது பணிகளில் இருந்து ஒய்வு பெற்றார்.

ஆயர் அவர்களின் பல தசாப்த காலப் பணி கத்தோலிக்க ஆன்மீக தலைமைத்துவத்திற்கு மட்டுமல்லாது சமூக அரசியல் தலைமைத்துவத்திற்கும் ஒரு மாபெரும் முன்னுதாரணமாகும். ஆயர் காட்டிய முன்னுதாரணத்தை பின் பற்றி வலுவான சமூக தலைவர்கள் எம்மத்தியில் உருவாக வேண்டும் என்பது தமிழ் சமூகத்தின் இன்றைய முக்கிய தேவைகளில் ஒன்றாகும்.

இச்சந்தர்ப்பத்தில் ஆயர் அவர்களின் அர்பணிப்பான மாபெரும் பணிக்காக எமது இறுதி வணக்கங்களையும் நன்றிகளையும் நாம் கூறிக் கொள்கின்றோம். இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களின் பாதையில் தமிழ் சிவில் சமூக அமையம் தொடர்ந்து தனது பணிகளை ஆற்றும் என்பதனையும் உறுதி படத்  தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version