Tamil News
Home செய்திகள் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணிலுக்கு ஆதரவு – சம்பந்தன்

வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணிலுக்கு ஆதரவு – சம்பந்தன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை தைப்பொங்கலுக்கு முன்னர் நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்க தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுளார்.

கடந்த காலங்களில் நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும், சிங்கள, தமிழ் புத்தாண்டையும் தெரிவு செய்திருந்தனர். எனினும், தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு தைப்பொங்கலையும், தமிழ் – சிங்கள புத்தாண்டையும் தமிழ் மக்கள் மிகவும் எதிர்ப்பார்புடனேயே கடந்துச் சென்றுள்ளனர். இந்த தைப்பொங்கல் காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதற்கு ஏற்ற முறையில் ஜனாதிபதி செயற்படுபவர் என நம்புவதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆசை அன்றிலிருந்து இருந்தது.

எனினும், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்ததாகவும், அதனால் தமிழ் மக்களின் நம்பிக்கை ஏமாற்றத்தில் முடிவடைந்ததாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

தென்னிலங்கையின் இனவாத அரசியலுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவது மிகவும் கடினமான விடயம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களும் கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version