வவுனியா மாவட்ட அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்குமான அறிவித்தல்

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், அசாதாரண சூழ்நிலைகளுக்குள்ளும் எமது கல்வியினை தொடர்ந்து பல்கலைக்கழகம் சென்று எமது 4 ஆண்டுகால பட்டப்படிப்பை நிறைவு செய்து இன்றுவரை பல வருடங்களாகியும் எவ்வித தொழிலுமில்லாமல் இருந்து வருவதுடன் பலவருடங்களாக நாம் தொழில் வாய்ப்பு கேட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம், மேலும் எமது பட்டதாரி தகைமைகளை கொண்டு தொழில் இன்றி எமது அன்றாட வாழ்கையினைக்கூட அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது. இதனால் இன்றுவரை பட்டதாரிகளாகிய நாம் வேலையற்று நடுத்தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுவருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கூறப்பட்ட 20000 வேலையற்ற பட்டதாரி நியமனங்கள் கூட சரியான வகையில் பூர்த்தி செய்யப்படாமல் தற்பொழுது வரைக்கும் வேலையில்லாப் பிரச்சினை பட்டதாரிகளுக்கு மத்தியில் தொடர்ந்துகொண்டே செல்கின்றது. எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னர் கூறிய வாக்குறுதிகளின் படி 54000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும், Internal & External, HND போன்ற எந்த பாகுபாடுமின்றி தகைமைக்கு ஏற்ப எதிர்வரும் (2020) ஜனவரி மாத இறுதிக்குள் வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுமெனவும் இவ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் ஆரம்ப கட்டமாக சாதாரண தகமையுள்ளவர்களுக்கு 100000 வேலைவாய்ப்புக்கள் உடன் வழங்கப்பட இருப்பது இவ்வளவு காலம் பட்டம் முடித்து வேலையற்று இருக்கும் பட்டதாரிகள் எமக்கு பெரும் ஏமாற்றமே.! எமக்கான தொழில் காலம் தாழ்த்தாது உடன் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பயனற்று போயுள்ளது. பட்டப்படிப்பை பூர்த்தி செய்து இன்று வரை எவ்வித தொழிலுமில்லாமல் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்த நாம் மென் மேலும் கஸ்டங்களையே தொடர்ந்து அனுபவித்து வருகின்றோம்.

எனவே இவ் புதிய அரசாங்கத்தின் தலைவர் மேன்மை தாங்கிய அதி மேதகு கௌரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் வாக்குறுதிகள் படி எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் வழங்கப்படவுள்ள 54000 வேலையற்ற பட்டதாரிகள் நியமனத்தை காலம் தாழ்த்தாது உடன் வழங்கவும், எந்தப்பாகுபாடுமின்றி பட்டதாரிகளை தொழில்களில் துரிதமாக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினருடன் சேர்ந்து எமது வவுனியா பட்டதாரிகளாகிய நாம் அனைவரும் இம்மாதம் இறுதியில் (29.12.2019) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளவது மிக அவசியமாகும்.

“வேலையற்ற பட்டதாரிகள்” என்ற பொதுவான எண்ணக்கருவின் கீழ் பட்டதாரிகள் அனைவரிற்கும் தொழில் கிடைக்கவேண்டும் என்று இம்மாதம் ஆரம்பம் முதல் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் மாவட்ட மட்டத்தில் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே எமது வவுனியா மாவட்டத்திலும் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையாக தொழில் வேண்டி இக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு எதிர்கால நியமனங்களை பெற்றுக்கொள்ள நாமும் முயற்சி செய்யவேண்டும்.

எனவே இதுவரை பட்டப்படிப்பை பூர்த்தி செய்து எவ்வித தொழில்களுமில்லாத வவுனியா மாவட்ட அனைத்து பட்டதாரிகளையும் இக் கூட்டத்திற்கு தவறாமல் சமூகம் தரும்படி வேண்டிக்கொள்கின்றோம்.

காலம்:- 29.12.2019
நேரம்:- மதியம் 2PM
இடம்:- FME Media College, இல.149, 3ம் மாடி, குட்செட் வீதி, வவுனியா.

மேலதிக தகவல்களுக்கு.!
தலைவர் – வினோதன் (077 54 44 874)
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்.