வவுனியாவில் மக்கள் நடமாடும் நடைபாதை வியாபாரம் செய்ய நகரசபையினால் மீண்டும் தடை

வவுனியா இலுப்பையடி பகுதியில் நடைபாதையில் இன்று வியாபாரம் மேற்கொண்ட சிலர் நகரசபையினால் மீண்டும் அகற்றப்பட்டு அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் கடந்த வருடம் டிப்பர் வானகம் மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதையும் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் காரணமாக நெரிசல்கள், விபத்துக்கள் இடம்பெறுதை சுட்டிக்காட்டி அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்ளத்தடை செய்யுமாறு நகர வட்டார நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கத்தினால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன்மொழியப்பட்டதையடுத்து சபையின் அனுமதியுடன் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு நகரசபை தலைவர் இராசலிங்கம் கௌதமனினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் அப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதற்கு சிலர் முற்பட்டபோது நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராசலிங்கத்தின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து நகரசபை தலைவரின் கவனத்திற்கு நகரசபை உறுப்பினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து நகரசபை தலைவர் நகரசபை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உடனடியாக அங்கு நடைபாதை வியாபாரம் மேற்கொள்ள மீளத்தடை செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு வியாபாரம் நடவடிக்கை மேற்கொண்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாருடன் இணைந்து நகரசபையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.