வலுவற்ற அரசியல் தலைமைகளால் பாதிக்கப்படும் மக்கள்-காண்டீபன் குற்றச்சாட்டு

வலுவற்ற அரசியல் தலைமைகளால் வவுனியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் குற்றச்சாட்டியுள்ளார்.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (17) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தில் சடுதியாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.தொற்று அதிகரிப்பால் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள எமது மாவட்டத்திற்கு இதுவரை பி.சி.ஆர் இயந்திரம் ஒன்று வழங்கப்படவில்லை.

இங்கு பெற்றுக் கொள்ளப்படும் பி.சி.ஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம், கொழும்பு, அனுராதபுரம் ஆகிய பகுதிகளிற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைக் குட்படுத்தப் படுகின்றது. இதன் மூலம் ஏற்படும் காலதாமதத்தால் மேலும் தொற்றாளர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

கொரோனா தொற்றினால் வவுனியாவில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்கும் எண்ணம் ஆளும் அரசியல் தலைமைகளுக்கும், வன்னி மக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களிற்கும் இல்லாத நிலைமை கவலை அழிக்கின்றது.

திருநாவற்குளம், சகாயமாதாபுரம் ஆகிய பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டு பல தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஆயினும் அந்த கிராமங்களின் தனிமைப் படுத்தல் நடவடிக்கையானது இன்று வரை அரச வர்த்தமானியில் அறிவிக்கப் படவில்லை. இதனால் அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரச உதவிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நிலமை இவ்வாறிருக்க வன்னியை ஆளும் வலுவற்ற அரசியல் தலைமைகள் வெட்கித்தலை குனியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எமது மக்களின் துன்பங்களை தீர்ப்பதற்கு அல்லும்பகலும் பாடுபடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.எனினும் இந்நிலைமைகளில் அரசுடன் பேசி முடிவெடுக்கும் வலுவுள்ளவர்கள் அக்கறையின்றி அசண்டையீனமாக செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வவுனியா மாவட்டத்தில் அக்கறை உள்ளவர்கள் உடனடியாக பொதுமக்களிற்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை பிரயோகிப்பதுடன், வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாட்டில் உடனடியாக இறங்க வேண்டும்” என்றார்.