வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினையாகியது

ஐக்கிய நாடுகள் சபையின் 2010ம் ஆண்டின் “எல்லா ஆட்களினதும் வலுக் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் பாதுகாப்புத் தொடர்பான அனைத்துலக மரபுசாசனம்” ஒவ்வொரு அரசையும் தங்கள் எல்லைக்குள் காணாமல் ஆக்கப்படுதல் நடைபெறாதவாறு பாதுகாக்கும் படி வலியுறுத்துகிறது.

அத்துடன் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தங்களின் உறவினர்கள் நிலை குறித்து அறிவதற்கும், நீதி பெறுவதற்கும், நட்டஈடுகள் பெறுவதற்கும் உள்ள உரிமையையும் இந்த அனைத்துலக மரபுசாசனம் உறுதிப்படுத்தியது.

1992ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் “எல்லா ஆட்களினதும் வலுக் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் பாதுகாப்புத் தொடர்பான பிரகடனம், 1994ம் ஆண்டின் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அமெரிக்க மரபுசாசனம், 1998ம் ஆண்டின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டவிதி, என்பனவற்றின் அடிப்படையிலேயே இந்த 2010ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் ; “எல்லா ஆட்களினதும் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் பாதுகாப்புத் தொடர்பான அனைத்துலக மரபுசாசனம்” உருவாக்கப்பட்டது.

இந்த மரபுசாசனத்தின் படி காணாமல் ஆக்கப்படுதல் என்பது நேரடியாகப் பாதிக்கப்பட்டவரின் மேலான மனிதஉரிமை மீறலாக மட்டும் அல்லாமல் அவருடைய உறவினரின் மேலான மனிதஉரிமை மீறலாகவும் உள்ளது. இதனாலேயே அனைத்துலச் சட்டங்கள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களது உரிமைகளும் பாதிக்கப்பட்டவரின் உரிமைகள் போலவே கருதப்பட வேண்டும் என மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அனைத்துலகச் சட்டங்கள் இவ்வாறு மிகத்தெளிவாக இருக்கின்ற அடிப்படையிலேயே, 2009ம் ஆண்டு இலங்கையில் அரசபடைகளிடம் பகிரங்கமாகச் சரணடைந்ததன் பின்னர் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தங்களின் உறவினர்கள் குறித்து அறிதற்கும்,நீதி பெறுவதற்கும்,நட்டஈடு பெறுவதற்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித உரிமைக் கோரிக்கை விண்ணப்பங்களை முன்வைத்து தங்களின் நீதிக்காவும் மனித உரிமைக்காகவும் போராடி வருகின்றனர்.

ஆயினும் இவ்வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்ட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்புடன் 2015இல் உருவாக்கிய முறைமைகள் கூட இதுவரை இலங்கையில் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இவற்றை எல்லாம் கவனத்தில் எடுக்காது, இன்றைய சிறிலங்காவின் அரச அதிபர், சட்டத்தின் ஆட்சிக்கு என்று தங்களைக் கையளித்துச் சரணடைந்த 18000 பேரை,யுத்தத்தின் விளைவாக இறந்தவர்களாகத் திரிபுபடுத்தி,“இறந்தவர்களை என்னால் மீளக் கொண்டுவர முடியாது” என்று மிகவும் அலட்சியமாகக் கூறி அவர்களுக்கு மரணசான்றிதழ் வழங்கப்படும் எனத் தனது விருப்பை பாதிக்கப்பட்ட உறவினர்கள் மேல் திணித்து,வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர்க்கான நீதியையும் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்க முற்பட்டுள்ளார். இது அனைத்துலகச் சட்டங்களை ஏற்க மறுக்கும் செயலாகிறது.

அத்துடன் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின உறவினர்களின் மனித உரிமைகளை இன்றும் எந்தவிதமான தயக்கமுமின்றி வன்முறைப்படுத்தும்ää இக் கூற்றுää இன்றும் கூடää அனைத்துலகச் சட்டங்களைக் கூடப் பொருட்படுத்தாது சிறிலங்கா இலங்கைத் தமிழர்களின் உயிருக்கும் நாளாந்த வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்க மறுக்கும் திட்டமிட்ட செயற்பாடாகவும் அமைகிறது. இதனால் இது ஈழத் தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் மறுப்பாகவும் உள்ளது. இந்நிலையில் ஈழத்தில் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினை என்பது ஈழத்தமிழரின் வெளியக சுயநிர்ணயஉரிமையின் அடிப்படையில் அனைத்துலக பிரச்சினையாக மாறுகிறது.

இனி,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் வழிகாட்டலில் அனைத்துலக மனித உரிமை விசாரணைகளை அங்கு மேற்கொள்வதன் வழியாக மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகிலும் மனிதஉரிமை வன்முறைகள் ஏற்படாது தடுக்க முடியும் என்பதே இலக்கின் ஒரே கருத்தாக உள்ளது.

இலங்கையில் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுவது தெளிவாகியுள்ள நிலையில், உலகின் மனித உரிமைகள் அமைப்புக்கள் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுடன் இது தொடர்பான தங்கள் தொடர்புகளை உருவாக்கப் புலம்பெயர் தமிழர்கள் விரைவாக செயற்பட வேண்டும். மேலும் புலம்பெயர் தமிழர்கள் இவ்அமைப்புக்களுடன் ஒற்றுமையான முறையில் தெளிவான விளக்கங்களையும் சான்றாதாரங்களையும் விரைந்து அளிப்பதும் அவசியமாகிறது. இந்த இரட்டை உறவு வழியாகவே இலங்கையில் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர்க்கான நீதி கிடைப்பதை நடைமுறைச் சாத்தியமாக்கலாம்.