‘வன்முறையை நாங்கள் உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம்’-பல இலட்சம் மக்களைக் கவர்ந்த உரை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலிருந்தாலும் ஜோர்ஜ் ஃபிளாய்ட்யின் கொடூரமான கொலையை கண்டித்தும் கறுப்பின மக்கள் மீது தொடரும் இனவெறி தாக்குதலுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க நாடு முழுவதும் பேரணிகள், கண்டன போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில் ஜோர்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட மினியாபோலீஸ் நகரில் நடைபெற்ற கண்டன பேரணியில் பேசிய இளம் பெண் போராட்டக்காரர் டமிகா மல்லொரி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரை டமிகா பேசிய காணொளியை முப்பது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

இந்த காணொளியில் டமிகா மல்லொரி பேசுகையில்,

“கொலை செய்யப்பட்ட எங்கள் சகோதரன் ஜோர்ஜின் மரணத்திற்கு நியாயம் கேட்டு நாங்கள் இந்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். ஃபிளாய்ட் போல் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் எங்கள் (கறுப்பின) மக்கள் மீது இந்த அரசு நடத்தும் கொடூரமான தாக்குதல்களை கண்டித்தும் நாங்கள் இந்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

எங்கள் சகோதரர் ஜோர்ஜை கொடூரமான முறையில் கொலைச் செய்த காவல் துறை அதிகாரியைக் கைது செய்யவேண்டும். இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்த போராட்டம் என்பது மினியாபோலீஸ் நகரத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு எதிரான நடிவடிக்கைக்கானது மட்டுமல்ல அமெரிக்காவில்

எங்கெல்லாம் கறுப்பின மக்களுக்கு எதிராக இனவெறி தாக்குதலில் காவல் துறையினர் ஈடுபடுகின்றனரோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

இந்த நாடு கறுப்பின மக்களுக்கான சுதந்திரமான நாடு என ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் இந்த பொய் பேச்சுக்களை நாங்கள் இனியும் நம்பப்போவதில்லை, உன்மைக்கு எதிரான இந்த பேச்சைக் கேட்டு நாங்கள் சோர்வடைந்துவிட்டோம்.

அமெரிக்கர்கள் கறுப்பின மக்களைப் பார்த்து கொள்ளையடிப்பவர்கள் திருடுபவர்கள் என்கிறார்கள். ஆனால் அமெரிக்கர்கள்தான் கறுப்பின மக்களை தங்களுடைய சொந்த ஆப்பிரிக்க மண்ணிலிருந்து கொள்ளையடித்து அடிமைகளாக அமெரிக்காவுக்குக் திருடிக் கொண்டுவந்தவர்கள்.

இந்த மண்ணில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த செவ்ந்தியர்களிடமிருந்து நிலத்தைக் கொள்ளையடித்தது அமெரிக்கர்கள்தான் எனவே கொள்ளையடிப்பதை நீங்கள்தான் செய்கிறீர்கள்.

கொள்ளையடிப்பதை, வன்முறையை நாங்கள் உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம்.

அதனால் நீங்கள் எங்களுக்கு அமைதியை கற்றுக்கொடுக்க நினைத்தால் முதலில் நீங்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்” என கறுப்பின மக்களின் உரிமை குரலை உலக மக்கள் அனைவரும் கேட்கும் வகையில் பேசியுள்ளார் டமிகா.