வட பகுதி கடல் எல்லைக்குள் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி வழங்க முடியாது- சார்ள்ஸ் எம்.பி

வட பகுதி கடல் எல்லைக்குள் இந்தியா, சீனா உட்பட எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதென,  பாராளுமன்றத்தில்  சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

எமது மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள வழி வகுக்க வேண்டும் என்றும், அவர் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

கடற்றொழில் தொடர்பில் குறிப்பிட்ட சில நாட்களாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. வட பகுதி மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக வரும் போது, எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.இதற்கான நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால், அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் நெல் கொள்வனவு செய்யப்பட்டது. எனினும், நிதி இல்லை என்பதால் நெல்லை கொள்வனவு செய்ய முடியாதென தற்போது குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவுக்கு விஜயம் செய்த போது, நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக நிர்ணயிப்பதாக குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சம்பா நெல்லை தற்போது கொள்வனவு செய்வதில்லை. இதனால் தனியார் வர்த்தகர்கள் 5,500 முதல் 6,000 ரூபாவுக்கு மாத்திரமே கொள்வனவு செய்கின்றனர். இதனால் ஒரு மூடைக்கு 3,000 ரூபா வரை விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுகிறது. எனவே, சம்பா நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.