வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா?…

சுகாதார வைத்திய சேவை என்பது காலமாற்றங்களுக்கு அப்பால் எப்போதும் எங்கேயும் எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாகும். இத்துறையின் முக்கியத்துவம் கருதி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டமாக இருப்பினும் சரி அரசு சாரா அமைப்புகளின் நிதி அணுசரனைகளாக இருப்பினும் சரி, தேசிய பாதுகாப்பிற்கு அடுத்தகட்டமாக இந்தச் சுகாதார வைத்திய துறைக்கே அதிகளவிலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சுகாதார சேவைத்துறையில் வைத்திய நிபுணர்கள் முதற்கொண்டு சுத்திகரிப்புத் தொழிலாளி வரையிலான அனைத்துப் பணியாளர்களும் முக்கியமானவர்களே. ஒரு தரப்பினரின் ஒத்துழைப்பின்றி மற்றைய தரப்பு பூரணமான எந்தச்சேவையையும் வழங்கி விட முடியாது.

எமது நாட்டைப் பொறுத்தமட்டில் இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த யுத்தகாலம், ஆழிப்பேரலை அனர்த்த காலம், மலேரியா டெங்கு போன்ற நோய்த்தாக்க காலம், தற்போதைய கொரோணா தொற்றுநோய்க்காலம் எனப் பல்வேறு காலச்சம்பவங்களை சாட்சிப்படுத்த முடியும்.

WhatsApp Image 2020 10 14 at 08.45.03 வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா?...

நாட்டில் ஒன்பது மாகாணசபை அதிகார அலகுகள் செயற்பட்டு வருகின்ற நிலையில், அண்மைக் காலமாக வடக்கு மாகாண ஆளுகைக்கு உட்பட்ட சுகாதார சேவை நிறுவனங்களில் மாத்திரம் சுகாதாரச்சேவை சாரதிகளை வேறு அரச நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

‘இல்லை, அப்படிச்செய்வது பொருத்தமற்றது. எங்களது நியமனம் ‘இணைந்த சேவை’ என்கின்ற வகையறைக்குள் இருந்தாலும் கூட, சுகாதார சேவை சார்ந்த எமது இத்தனை வருட பட்டறிவும், கற்றறியும் மக்களுக்குப் பயன்படாமல் திட்டமிட்டு வீணடிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது!’ எனத் தெரிவிக்கும் வடமாகாண சுகாதார சேவை சாரதிகள் சங்கம், தமது பக்க நியாயத்தை சான்றாதாரங்களுடன் ஒப்புவித்து சுகவீன லீவுப்போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

WhatsApp Image 2020 10 14 at 08.45.05 வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா?...

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சுகாதாரச்சேவைச் சாரதிகள் கவனவீர்ப்புக்களில் பங்கெடுத்து வருகின்ற போதிலும், நோயாளர் காவு வண்டிச்சேவைக்கும் நிறுவனத் தலைவர்களின் போக்குவரத்துச் சேவைக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணமே முன்னெடுக்கின்றனர்.

வேறெந்த மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படாத பொருத்தமற்ற இந்த சாரதிகளது இடமாற்றத்தின் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு, வடமாகாண பிரதம செயலக அதிகாரிகளின் பதிலென்ன? ‘சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகின்றோம். அதற்கப்பால் யதார்த்தம், மனிதாபிமானம், பட்டறிவு, கற்றறிவு பற்றியெல்லாம் எம்மால் யோசிக்க முடியாது.’ என்பதாக அவர்களின் பதில் அமைகின்றது.

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் இந்தப்பதிலானது, சுகாதாரசேவை சாரதிகளின் போர்க்கால அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் புறமோதித்தள்ளும் விதமான அதிகாரப்பலத்தைப் பிரதிபலிக்கின்றதா? என அறிவுப்புலத்தினர் ஆதங்கப்படுகின்றனர்.

WhatsApp Image 2020 10 14 at 08.45.04 வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா?...

அத்தியாவசிய சேவை நல்கும் அரச நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் தனியே சுற்று நிருபங்களுக்குள் மாத்திரம் வலிந்து நின்று அடம்பிடித்துக்கொண்டு சிறந்த சேவையினை வழங்கிவிட முடியாது.

அனர்த்தங்கள், அவசர தேவைகள் ஏற்படுகின்றபோது, மனித உயிர்களுக்கும் மனிதாபிமானத்திற்கும் முன்னுரிமையளித்து செயற்படுவது அவசியமாகின்றது. 2009ற்கு முற்பட்ட யுத்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைப்பணிப்பாளர்கள் இந்த அவசியத்தை உணர்ந்து செயற்பட்டிருந்தனர். ஆகையினாலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரைநிவாரணமேனும் அலைச்சல் இன்றி கிடைக்கப்பெற்றது.

அவ்வாறு சுற்றுநிரூபங்களுக்கும் மனிதாபிமானத்திற்கும் இடைநடுவில் நின்றுகொண்டு சேவை நல்கியவர்களுள் வடமாகாண சுகாதார சாரதிகள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பொதுவாக சாதாரண துறை சாரதிகளைப் பார்க்கிலும் சுகாதார சேவைச் சாரதிகள் முற்றிலும் வேறுபட்ட தகமைத் தேர்ச்சிகளை கொண்டிருக்கின்றார்கள். அதை காலச்சூழல் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அது தவிர, சுகாதார சேவைச் சாரதிகளின் செயற்திறனை மேலும் மேம்படுத்துவதற்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இவர்களுக்கு பல்வேறு பயிற்சிப்பட்டறைகளை வழங்கியுள்ளது.

அந்தவகையில்,

1-ஐ.ஓ.எம் நிறுவனம்:

முதலுதவி மற்றும் நோயாளிகளைக் கையாளுதல் என்கிற பயிற்சிகளை வழங்கியுள்ளது.

2-சென்-ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் படைப்பிரிவு:

நோயாளர்காவு வண்டித்தொழிநுட்பம், வாகன இயந்திரத் தொழிநுட்பம், அனர்த்த முகாமைத்துவம், மருத்துவ உபகரணக் கையாளுகை உட்பட இன்னும் பல பயிலமர்வுகளை மேற்கொண்டுள்ளது.

3-கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடம்:

சுகாதாரசேவைச் சாரதிகளுக்கென விசேட மருத்துவ முகாம் களப்பயிற்சி, நெருக்கடி நிலைமைகளில் தீர்மானமெடுத்தல், மனிதநேயம், மற்றும் அர்ப்பணிப்புடனான தியாக மனப்பாங்கை வளர்த்தல் போன்ற போதனைப் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

குறித்த பயிற்சிப்பட்டறைகளில் பங்குபற்றிய வடமாகாண சுகாதார சேவைசாரதிகளுக்கு மேற்கூறிய அத்தனை பயிற்சிகளுக்கும் தனித்தனி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான தகைமைகளை உடைய சாரதிகளே மனித உயிர்காக்கும் மருத்துவ சேவைக்குப் பொருத்தமானவர்களாக இருக்க முடியும்.

இதன் அடிப்படையிலேயே ஏனைய எட்டு மாகாணங்களினதும் சுகாதார சேவைச் சாரதிகள் வேறெந்த துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவதில்லை. இவர்களது நீண்டகால சேவை அனுபவத்தை நுகர்வோரான மக்களுக்கு கொண்டு செல்வதில் அந்த அதிகாரிகள் வெற்றி காண்கிறார்கள்.

இந்த நிலையில், வடக்கு மாகாண சபை மாத்திரம் சுற்றறிக்கை என்ற சூத்திரத்தை பிடித்து வைத்துக்கொண்டு சுகாதார சேவைச் சாரதிகளை இடமாற்றம் செய்ய முற்படுகின்றது.

வடக்கில் மட்டும் ஏனிந்த வெறுப்பும் வேறுபாடும் காட்டப்படுகின்றது? இதில் என்ன அரசியல் ஒளிந்திருக்கின்றது? இவ்விடயத்தில் தொடர்ந்தும் பொறுப்பதிகாரி தொடருமாயின் இறுதியில் அதன் பாதிப்பு அப்பாவி மக்களையே சென்று சேரும்.

உண்மையில் கடந்த கால நிலைமையினை அறிந்திராத அல்லது உணர்ந்திராத அதிகாரிகளால் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றதா? என எண்ணத்தோன்றுகின்றது.

WhatsApp Image 2020 10 14 at 08.39.46 வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா?...

யுத்த பூமியில் இருவேறு துருவங்களாக பரஸ்பர மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தரப்புகளுக்கு மத்தியில் ஊடாடிப்பணிபுரிவதென்பது சாதாரண கற்பனைக்கு அப்பாலானது.

பயண அனுமதி, புலன்விசாரணை, சோதனைச்சாவடி எனப் பல தடைகளைக் கடந்து பதுங்கு குழிகளுக்குள்ளும் பல் குழல் எறிகனைக்குள்ளும் புரண்டெழுந்து நேர காலம் பாராமல் போரின் இறுதித்தருணம் வரை உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணி செய்த ஒரே தரப்பு இந்த வடமாகாண சுகாதார சேவைச் சாரதிகள் தான் என்பதை யாரும் எப்போதும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

சுகாதார சேவையின் சாரதிகள் ஒரு வீரனை போன்று செயலாற்ற வேண்டியிருந்தது. தமது சாரதியத்தினாலும் சாதுரியத்தினாலும் நோயாளிகளை காப்பாற்றுவது மட்டுமல்லாது தம்மையும் தற்காத்துக்கொள்ளப் போராடினார்கள். இதற்கப் பல சான்றாதாரங்கள் இருக்கின்றன.

4-2006 ஓகஸ்ட் – 08 அன்று, நெடுங்கேணி வைத்தியசாலைக்குரிய நோயாளர் காவுவண்டி புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்று திரும்பும் வழியில் கிளைமோர்க்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டது. அதன்போது, மூன்று பிள்ளைகளின் தந்தையான சாரதி கோபால் சுந்தரம் உட்பட ஐந்து மருத்துவ பணியாளர்கள் பலியாகினர்.

5-2007 ஜீலை- 10 அன்று நடமாடும் மருத்துவ முகாமொன்றை செய்துவிட்டு ஏ-9 சாலையூடாக கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த வாகனம் மீது கிளவன்குளம் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கிளிநொச்சிப்பிராந்திய சுகாதார சேவைப்பணிமனையின் சரியான ஒரு குழந்தையின் தந்தை திவாகரன் பலியாகினார்.

6-2007 நவம்பர் -25 அன்று இடம்பெயர்ந்த மக்களுக்கான விசேட மருத்துவ முகாமிற்கான மருத்துவப்பொருட்களை கொண்டு சென்ற போது முழங்காவில் மருத்துவ மனைக்குச் சொந்தமான  நோயாளர் காவு வண்டி மீது முற்கொம்பன் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது சாரதியான பா. தவசீலன் படுகாயத்துக்குள்ளாகி நீண்ட கால மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

குறித்த இந்தச் சாரதியும் கடந்த வருடம் வேறு திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.’சுகாதார சேவைச்சாரதிகள் பொருத்தமற்ற இடமாற்றத்தை இரத்துச்செய்து தம்மை சுகாதார சேவைக்குரிய தனித்துவச் சாரதிகளாக அங்கீகரிக்க வேண்டும்’ என்கின்ற தர்க்கரீதியான கோரிக்கை மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளிடமும் துறைசார்ந்த மத்திய அமைச்சர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மாகாண சபைகள் மற்றும், உள்ளூராட்சி விவகார இராஜாங்க அமைச்சர் ரியல்அட்மிரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி சரத்வீரசேகரா (நாடாளுமன்ற உறுப்பினர்) அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ. ஜனக பண்டார தென்னகோன், கௌரவ. அமைச்சர் டக்லஸ்தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ்மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர், கௌரவ. அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறும் அதற்காக அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யவிருப்பதாகவும் வடமாகாண ஆளுநருக்கு அறிவித்துள்ளனர்.

இதைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் பொருத்தமற்ற இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென மாகாண ஆளுநரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆகவே ஆளுநர் செயலகம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, பேரவைச் செயலகம், மாகாண சுகாதார சேவை மற்றும் சுகாதார திணைக்களம் என்பன இவ்விடயத்தில் மக்கள் நலனை கருத்திற்கொண்டு முடிவுகளை எடுப்பதே சிறந்தது.

விவேகானந்தனூர் சதீஸ்