வடக்கு மாகாண தொற்று நோயியல் வைத்தியசாலை ஊழல்- ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்று நோயியல் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்களை கணக்காய்வு அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக  காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச் செல்வன் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண தொற்று நோயியல் வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து கணக்காய்வு திணைக்களம் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

இந்த அறிக்கையின் பிரதியை பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர் அதனை அடிப்படையாகக் கொண்டு செய்தி அறிக்கையினை எழுதியிருந்தார். குறித்த செய்தி பத்திரிகை மற்றும் இணையத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டு ஊடகவியலாளரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறு ஊழல்கள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படாமல், குறித்த ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டாதாகவும் ஆனால் தற்போது ஊழலை வெளிக்கொண்டுவந்த ஊடகவியலாளர் மீது காவல்துறையில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை ஓர் முதிர்ச்சியற்ற தன்மை எனவும் கிளிநொச்சி சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.