வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப் படுத்தப்படுவார்கள்

இலங்கையின்  கம்பஹா, கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போல் கிழக்கு மாகாணத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ள நிலையில், சில பகுதிகள்   தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் மற்றும் பகுதிகளில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறும் வருகை தருவோர் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில்,   கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மதித்துச் செயற்படவேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து  இலங்கை சுகாதாரத் துறை தரப்பில், ”கடந்த 24 மணி நேரத்தில்   865 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.