Tamil News
Home செய்திகள் வடக்கு மக்கள் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் : மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா

வடக்கு மக்கள் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் : மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா

கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம்   இலங்கையில் கொரோனா தொற் றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவிக்கையில், “வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதேபோல யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால்  இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில், 77 வயது, 59 வயது நபர்களே இவ்வாறு மரணமாகினர். அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்து யாழ். போதனா வைத்தியசாலையின் விசேட பிரிவில் தகுந்த கண்காணிப்புக்குள் இருந்தவர்கள். அவர்கள் கொவிட் தொற்று காரணமாக நேற்றும் (நேற்றுமுன்தினம்) இன்றும் (நேற்று) மரணமாகி இருக்கின்றார்கள்.

எனவே, இது தொடர்பில் மக்களின் விழிப்புணர்வு மிக அத்தியாவசியமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் நமது வைத்தியசாலையில் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைச் செய்திருக்கின்றோம்.

உதாரணமாக இப்பொழுது நமது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பெறுபவர்களுக்கு சத்திரசிகிச்சை கூடத்துக்குச் செல்வோர் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்த பின்புதான் அவர்களை சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கின்றோம்.

அதேபோல, விபத்து பிரிவில் வருபவர்கள் உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டி இருப்பின் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சிகிச்சைக்காக சேர்க்கிறோம். அந்தவகையில் தினமும் 75 தொடக்கம் 100 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இதேபோல் நாளாந்தம் 400 பேருக்குரிய பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்தோடு எமது வைத்தியசாலையில் விடுதிகளில் 5 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் நோயாளிகளுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து இருக்கின்றோம். இதன்மூலம் நமது வைத்தியசாலையை கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையாக இருக்கின்றது.

பொதுவாக நோயாளர்களை பார்வையிட வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கின்றோம். அதில் மக்கள் தமது கணிசமான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள். மேலும், இன்னும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. வைத்தியசாலை ஒரு முக்கியமான இடம்.

இவ்வாறான இடத்தில் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

Exit mobile version