Tamil News
Home உலகச் செய்திகள் வடக்கு சிரியாவில் துருக்கி – குர்தீஸ் படைகள் 5 நாள் போர் நிறுத்தம்

வடக்கு சிரியாவில் துருக்கி – குர்தீஸ் படைகள் 5 நாள் போர் நிறுத்தம்

வடக்கு சிரியாவில் 5 நாள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகளுக்கு எதிரான துருக்கி கடந்த ஒருவாரமாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. துருக்கி தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், சிரியாவின் வடக்குப் பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வடக்கு சிரியாவில் 5 நாள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதித்துள்ளதாக மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதித்தது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றி… துருக்கிக்குக் கிடைத்த வெற்றி” என்று பதிவிட்டுள்ளார்.

துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த வாரம் உத்தரவிட்டார். துருக்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தனது படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா. இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தாக்குதல் நடத்தியது துருக்கி.

துருக்கியின் இந்த ராணுவ நடவடிக்கை காரணமாக சிரியாவில் சுமார் 4 லட்சம் மக்கள் வெளியேறினர். இதில் 70,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

சிரியாவின் குர்து படைகள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், இந்தியா , சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஜெர்மனி, பின்லாந்து போன்ற நாடுகள் துருக்கிக்கு தற்காலிகமாக ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்று தெரிவித்தன.

Exit mobile version