வடக்கு கிழக்கில் COVID19 தொற்றையும் இனவாதமாகவே கையாளுகிறது அரசு – கஜேந்திரன் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் COVID19 தொற்றையும் அரசு இனவாதமாகவே கையாளுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் தனது பாராளுமன்ற உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இன்றையதினம் கொரோனாத் தொற்றை கையாளுதல் மற்றும் ஏனைய தேவைகளுக்கான குறைநிரப்பு பிரேரணை தொடர்பான விவாதம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த இடத்தில் இந்த கொரோனா தொற்றைக் கையாளுதல் தொடர்பிலே அரசாங்கம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பது தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தவேண்டியிருக்கின்றது.

என்னைப் பொறுத்தவரையில் கொரோனாத் தொற்று விடயத்தில் அரசாங்கம் இதனைக் கையாளுவதிலே முழுமையான தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது. ஏனென்று சொன்னால் இந்த கோவிட்தொற்று விடயத்தைக் கையாளுவதில் அரசாங்கம் சுகாதாரத்துறையினரிடம் அந்த பொறுப்பைக் கையளிக்காமல் கொரோனா வைரஸ் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வைத்தியத்துறை சார்ந்தவர்களை முதன்மைப்படுத்தாமல் இதுதொடர்பான எந்தவிதமான அறிவுகளுமற்ற இராணுவத்தினரை இந்த தொற்றைக் கட்டுப்படுத்துகின்ற செயலணிக்கு பொறுப்பாக நியமித்திருக்கின்ற காரணத்தினாலே இதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பெரும் தோல்வியைக் கண்டிருக்கின்றது.

அத்தோடு அரசாங்கத்திடம் இருக்கின்ற இனவாத சிந்தனைகளும் இந்த தோல்விக்கு பிரதானமான காரணமாக இருக்கின்றது. இதன் காரணமாக இந்த தொற்றானது சமூகப்பரவல் அடைந்திருக்கின்றது என்பதனை அரசு ஏற்றுக் கொள்கிறதா என்பது ஒரு கேள்வியாக இருக்கின்றது.

கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் வடக்கு கிழக்கில் இனவாதமாகவே நடந்து கொள்கின்றது. கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டு ஒன்றரை வருடம் கடந்துள்ள போதும் கூட வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் தாதியர்கள் மருத்துவ ஆய்வுகூட உதவியாளர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் போன்றவர்களுக்கான பற்றாக்குறைகளை நிரப்ப அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

கோவிட் தொற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான PCR இயந்திரம், அதன் சோதனைகளை விரைவுபடுத்த தேவைப்படும் RNA extractor போன்றவற்றை போதிய அளவிற்கு வழங்கவில்லை. இப்பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு தேவையான MLT உத்தியோகஸ்தர்களும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது.

வடமாகாணத்திலுள்ள 114 வைத்தியசாலைகளில் முப்பது வைத்தியசாலைகளுக்கு மட்டுமே தாதியர்களுக்கான கார்டர்(Carder) உள்ளது. அந்த முப்பது வைத்தியசாலைகளிலும் உள்ள காடர்கள் கூட 2016 ம் ஆண்டிற்கு பின்னர் மீளாய்வு செய்யப்படவில்லை.

இந்த 114 வைத்தியசாலைகளில் 30 வைத்தியசாலைகளில் மட்டும்தான் காடர்கள் இருக்கிறது என்று சொன்னால் இந்த அரசு, இந்த சுகாதார அமைச்சு எந்தளவு தூரத்திற்கு வடமாகாணத்தை பாரபட்சமாக நடத்துகிறது என்பதனை இதிலிருந்தே நாங்கள் நன்றாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

வட மாகாணத்திலேயே 250 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. அதே போன்று ஆயிரம் தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. 600 மருத்துவ தொண்டர்களுக்கான பற்றாக்குறையும் காணப்படுகின்றது. வட மாகாணத்தில் கடந்த 15,20 வருடங்களுக்கு மேலாக யுத்த காலத்திலேவைத்தியசாலைகளில் தொண்டர்களாக பணியாற்றிய தொண்டர்கள் கிட்டத்தட்ட 400 பேர் கடந்த 3 மாதகாலமாக வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கொரோனா தொற்று காலத்திலே சுகாதார தொண்டர்களுக்கான பற்றாக்குறை பெருமளவில் நிலவுகின்ற போதிலும் கூட அவர்களைக் கூட நியமிப்பதற்கு அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.