வடக்கு ஆளுநருக்கு வவுனியாவில் வரவேற்பு

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ள திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸிற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வரவேற்பு வைபவம் ஒன்று இன்று (02)வவுனியாவில் நடைபெற்றது.

செ.சந்திரகுமார் தலைமையில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், ஆளுநர் வவுனியா நகர எல்லையில் வைத்து வாகன பவனியாக அழைத்து வரப்பட்டார். சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளின் பான்ட் வாத்திய இசையுடன் வவுனியா நகரசபை தலைவர் கௌதமன் புதிய ஆளுநரை வரவேற்றார்.

பொன்னாடை போர்த்து, மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வந்த ஆளுநர் மங்கள விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

தலைமை உரையையும் வரவேற்புரையையும் செ.சந்திரகுமார் நிகழ்த்திய அதேவேளை, ஆசியுரையினை மதத்தலைவர்கள் நான்கு பேரும் நிகழ்த்தினர். இதனையடுத்து பொது அமைப்புக்களின் சார்பில் வாழ்த்துப்பா பாடியதுடன், வாழ்த்து மடல்களும் ஆளுநருக்கு வழங்கப்பட்டன.

ஏற்புரையினை ஆளுநர் சாள்ஸ் நிகழ்த்தினார். அவர் தனது உரையில்,

வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணித்து நான் பணியாற்றுவேன். பாரிய பொறுப்பு ஒன்று என்மீது சுமத்தப்பட்டுள்ளதை நான் உணர்கின்றேன். உங்களுக்காக நான் இரவு பகல் பார்க்காது கடமையாற்றுவேன்.

ஜனாதிபதி எனது பதவி பற்றி குறிப்பிடும் போது, இந்த மாகாண மக்களிடம் தீராத வலிகள் இருக்கின்றன. ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. நிறைவுறாத பல வேலைகள் இருக்கின்றன. தேவைப்படுகின்ற அபிவிருத்திகள் இருக்கின்றன. அனைத்தையும் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் உறுதுணையாக அனைத்தையம் செய்து தருவேன் எனக்கூறியே என்னை இங்கு அனுப்பியுள்ளார். அந்த நல்ல செய்தியுடனேயே நான் இங்கு வந்துள்ளேன்.

எனவே இந்த மாகாண மக்களை அனைத்து விடயங்களிலும் தலைநிமிர்ந்து வாழும் மாகாணமாக மாற்றுவேன். அரசியலுக்கு அப்பால், மதங்களுக்கு அப்பால், வர்க்கங்களுக்கு அப்பால், முரண்பாடுகளுக்கு அப்பால் நீங்கள் என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நான் உங்களுக்கு என்னை அர்ப்பணித்து செயற்படுவேன் என கூறினார்.

இந்நிகழ்வில் பல தரப்பைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.