வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் போராட்டத்திற்கு அழைப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30 ஆம்திகதி காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதிகோரிய பேரணி ஒன்றை வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கவுள்ளோம். குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தகர்கள், பேருந்து உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கட்சி பேதமின்றி அணிதிரண்டு உங்கள் ஆதரவினையும் பங்களிப்பினையும் நல்குமாறு கேட்டு நிற்கின்றோம்.

போரின் போது இடம்பெற்ற விடயங்களை நாம் கோரவில்லை. போர் முடிவடைந்த பிறகு ஓமந்தையிலும் வட்டுவாகலிலும் ராணுவத்திடமே எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். அத்துடன் வவுனியா, மன்னாரில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள் எமது உறவுகள் காணாமல் போக செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை புலிகள் பிடித்து சென்றதாக கூறுகின்றமை எப்படி சாத்தியமாகும். எனவே எமக்கு பொறுப்பு கூற வேண்டிய ஜனாதிபதி அப்பட்டமான பொய்யை சொல்கிறார். நாம் எந்த அரசியல்வாதிகளிற்கு பின்னாலோ கட்சிகளிற்கு பின்னால் இருந்தோ செயற்படவில்லை.

நாம் எமது நீதிக்கான போராட்டத்தை தன்னிச்சையான முறையிலேயே ஆரம்பித்துள்ளோம். நாங்கள் நிவாரணத்தை தேடியோ, மரண சான்றிதழை கேட்டோ போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. இன்று எமது போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மூன்றாவது ஜனாதிபதியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் கால அவகாசம் கோருகின்றனரே தவிர மக்களுக்கான தீர்வை வழங்க முன்வரவில்லை.

எம்மை ஏமாற்றுவதே அவர்களது நோக்கமாக இருக்கிறது. தமிழ் அரசியல்வாதிகள் எமது விடயத்தில் அக்கறையாக செயற்படவில்லை. எம்மைவைத்து அவர்கள் எதும் செய்யலாம் என்பதே அவர்களது நோக்கம். நாலரை வருடம் அரசுக்கு ஆதரவை வழங்கினார்களே தவிர எமக்கு எதுவும் செய்யவில்லை.

எமக்காக எந்த கஸ்ரத்தையும் அவர்கள் அனுபவிக்கவில்லை. அவர்களால் எந்தவிதமான பலனும் இனிமேல் இல்லை. எமது உறவுகள் தொலைந்து விட்டார்கள் இறுதியில் உறவுகளை தேடி அலைந்தவர்களும் இறந்து போக போகின்றார்கள்.

இதேவேளை 15 வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். இராணுவத்தினரும் புளொட் அமைப்பினரும் கடையில் பணியாற்றிய எனது மகனை கடத்திச்சென்றமை தொடர்பில் சாட்சியமளித்த நிலையிலும் எவ்வித பலனும் இல்லாத நிலையே உள்ளது எனவும் தெரிவித்தனர்.