வடக்கில் ஐந்தாவது கொரோனா மரணம் பதிவு – 7 பேருக்கு நேற்று வைரஸ் தொற்றியது

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது. அதேவேளையில் நேற்றைய தினத்தில் வடக்கில் ஏழு பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 73 வயது பெண்ணொருவரே கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இந்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை மன்னாரில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு மூன்றாக உயர்ந்ததுடன் வடக்கில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

இதேவேளையில், வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை – கச்சேரி பஸ் நடத்துநர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 379 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவர்களில் 7 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வலைப்பாடு மீன்வாடியில் தொழிலில் ஈடுபடும் அவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.