வடக்கில் எகிறும் கொரோனா – 24 மணி நேரத்தில் மட்டும் 125 தொற்றாளர்

வடக்கு மாகாணத்தில் நேற்றிரவு வரையான 24 மணி நேரத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவிலேயே இவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதில், நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 420 பேரின் சோதனை முடிவுகள் வெளியாகின. இதன்படி, கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 31 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேரும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, கோப்பாய் ஆதார வைத்தியசாலைகளில் தலா 2 பேர் வீதம் 6 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேரும், யாழ். போதனா வைத்தியசாலையில் மூவருமாக 17 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதேபோன்று, யாழ். பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் 356 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 25 பேர் சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள். அத்துடன் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேரும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேரும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேரும், மருதங்கேணி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருமாக 47 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். இதனால், நேற்று மட்டும் 64 பேர் யாழ்ப்பாணத்தில் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

இதேபோன்று நேற்று முன்தினம் இரவு வெளியான பி.சி.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் வடக்கில் 21 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டனர். இவர்களில் 13 பேர் கிளிநொச்சி பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச் சென்றவர்களாவர். யாழ். மாவட்டத்தில் 7 பேரும், வவுனியாவில் ஒருவருமாக 21 பேர் நேற்று முன்தினம் இரவு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.