வடக்கின் புதிய ஆளுநரிடம் விடுக்கப்பட்டுள்ள முதல் வேண்டுகோள்!

வடக்கு மாகாண ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமையிட்டு கர்வமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக நேற்றைய தினம் தனது கடமைகளை சார்ள் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் புதிய ஆளுநருக்கான வரவேற்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர்,

“வடக்கு மாகாண ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமையிட்டு கர்வமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

எங்களுடைய புதிய ஆளுநர் எங்களுடைய மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். வடமாகாணத்தில் பெண் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டமையைக் கொண்டு அதனைக் கூறினேன்.

மாகாண மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். யுத்தம் முடிவுற்ற நிலையில் பாதிக்கப்பட்டிருந்த அத்தனை மக்களையும் வவுனியா வரவேற்றது. அத்தனை மக்களையும் பசி தாகம் இன்றி இருப்பதற்கு முக்கிய கடமையாற்றியவர், மிகவும் துணிச்சலும் சேவை உணர்வும் கொண்டவர்.

எங்கள் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வருவது என்பது வரவேற்கத்தக்க விடையம். அவரை இந்த நேரத்தில் பாராட்டுவதுடன் நாங்களும் உங்களுடன் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்குவோம். எங்கள் மக்களுக்குத் தேவையான விடயங்களை சிறப்பாக செய்யவேண்டும். உங்கள் பணி பல துறைகளிலுமே சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள். அத்தகைய சிறப்பான பணிகளும் இந்த மாகாணத்திற்கு கிடைக்கவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்களும் மாவட்டங்களிலுள்ள அரசாங்க அதிபர்களும் அனைவரும் உங்களுக்கான ஒத்துழைப்பை வழங்குவோம். எங்கள் மக்களின் வாழ்வு வளம் பெற அனைத்து விதத்திலும் உதவிகளை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம்” என்றார்.