வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – பாலநாதன் சதீஸ்

வாழ்விடங்களையும், வழிபாட்டிடங்களையும் இழந்து  தமிழ் மக்கள் மீண்டும் நிர்கதியாய் நிற்கவேண்டிய நிலை

இலங்கையில் அதிக தமிழ் மக்கள் செறிந்து வாழும்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்டபடி இலங்கை அரசு, பல்வேறு அணுகுமுறைகளை கையாண்டு,  தமிழ் மக்களின் காணிகளையும், வழிபாட்டு தலங்களையும்  அபகரித்து வருகின்றது.

யுத்தம் முடிவடைந்து பன்னிரு ஆண்டுகளை கடந்த நிலையிலும், இன்றும் இலங்கை நாட்டில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவாறு வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களின் சொந்த  நிலங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் வனவள திணைக்களத்தினர் அரச காணிகளாக அடையாளப்படுத்தி, பொதுமக்களை தங்கள் காணிகளுக்குள்ளும், வழிபாட்டுத் தலங்களிற்குள்ளும் செல்லவிடாது, பல கட்டுப்பாடுகளை விதித்து அபகரித்து வருகின்றனர்.

image 0f126edb65 வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் - பாலநாதன் சதீஸ்

அரசின் மனிதாபிமானமற்ற இச் செயற்பாடுகளால் வயதுமுதிர்ந்த பலர் தமது சொந்தக் காணிகளுக்குள்ளும், வழிபாட்டுத் தலங்களுக்கும், செல்ல முடியாமல் இறந்திருக்கின்றார்கள்.   அத்துடன் பல பொது மக்கள் தற்போதும் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆனாலும் எதனையும் கருத்திற் கொள்ளாத அரசு தொடர்ந்து  தமிழ்மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு தீர்வுகளும் கிடையாது, எவராலும் எதுவும் செய்யமுடியாத நிலையில் பொது மக்கள் இருக்கின்றனர்.

வட கிழக்கில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கும் மேலான  தமிழ்மக்களின் காணிகள் பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் பாதுகாப்பு படையினரால்  கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, வட மாகாணத்தில் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில்  அபகரிக்கப்பட்ட பொதுமக்களின்  நிலங்கள் இன்று பாரிய இராணுவத் தளங்களாக உருவெடுத்திருக்கின்றது.   யுத்தம் முடிவடைந்த நிலையில் அரசினால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலங்களை மீட்பதற்காக மக்கள் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை நடாத்தி, கோரிக்கைகளை முன்னிறுத்தியே  அரசினால் கைப்பற்றப்பட்ட ஒருபகுதி நிலங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்படிருந்தது. இருந்த போதிலும் பல ஏக்கர் நிலங்கள் பாதுகாப்புத் தரப்பினர் வசமே இருந்து வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மீண்டும் வனவளத் திணைக்களத்தினர் தமிழ் மக்களின் காணிகளை அரச காணிகளாக அடையாளப்படுத்தி அபகரிக்க முயல்கின்றனர்.

IMG 20210507 082440 வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் - பாலநாதன் சதீஸ்

நில அபகரிப்புக்கு இலங்கை அரசு  வெவ்வேறு அணுகுமுறைகளை  பின்பற்றி வருகின்றது.  குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி, பாதுகாப்பு எனும் பெயரில் பெருமளவான  தமிழ்மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மட்டக்களப்பு பகுதியில் அதாவது வவுணதீவு, கல்குடா, புல்லுமலை, வாழைச்சேனை, வாகரை போன்ற இடங்களில் காணி அபகரிப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன. இது மட்டுமல்ல மகாவலி அபிவிருத்தி எனும் பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்ளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் உள்ள ஆண்டான்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் மக்களை தமது நிலங்களுக்கு செல்ல விடாது தடை விதித்திருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க இன்று  வனவளத் திணைக்களத்தினர் தமிழ் மக்களின் நிலங்களை சொந்தம் கொண்டாடி அபகரிப்புகளை நடாத்தி தமிழ் மக்களின் வழிபாட்டு இடங்களையும் திட்டமிட்டபடியே அபகரிக்க முயல்கின்றனர். இது நியாயமானதல்ல.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆலயங்கள் மற்றும் சமய இலக்கியங்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் வரலாறாக குறிப்பிடப்பட்டு வருகின்ற சைவ ஆலயங்கள் பலவற்றில் பௌத்த தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, தொல்லியல் திணைக்களத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக  உரிமை கோரி வருகின்றனர்.

அவற்றில் சில

IMG 20210507 082627 வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் - பாலநாதன் சதீஸ்

ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம், மாந்தை கிழக்கு  பத்திரகாளி அம்மன் கோவில், குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதர் முருகன் கோவில், குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில், பாண்டியன்குளம் சிவன் கோவில், வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில், குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில், மன்னார் திருக்கேதீஸ்வரன் கோவில், மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில், ஒதியமலையில் வைரவர் கோவில், முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில், திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை, புல்மோட்டை அரிசி ஆலை மலைக் கோவில், மூதூர், சூடைக்குடா  மலைப்பகுதி முருகன் ஆலயம், திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம், சிவபுரம் சிவாலயம், மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில், குஞ்சுமப்ப பெரியசாமி கோவில், ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில், கல்லுமலை  பிள்ளையார் கோவில், மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்,  மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை, குருந்தூர்மலை ஆதி ஐயனார் கோவில், மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம், கன்னியா வெந்நீர் ஊற்று, குசலமலை சைவ குமரன் ஆலயம்,  காங்கேசன்துறை சைவ ஆலயம், என  பல ஆலயங்கள் வடக்கிலும், கிழக்கிலும் இன்று அபகரிக்கப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட ஆலயங்களில், திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த சகல கட்டுமானங்களையும் தொல்லியல் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வருகிறது. குறிப்பாக இந்தக் ஆலய வளாகத்தில் இருக்கின்ற கட்டுமாணங்களில் 99 சதவீதமானவை, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த இடம் பௌத்த மதத்திற்கு உரியது என்றும் அறிவித்திருக்கிறார்கள்.  அதே நேரம் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான  ஜனாதிபதி செயலணியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் அவர்கள் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அனுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என்று உரிமை கோரியிருக்கிறார்.

IMG 20210507 082815 வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் - பாலநாதன் சதீஸ்

அதே போல திருகோணமலை மாவட்டத்தில்  ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில் அழிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாசன  பப்பாத ராஜமஹா விகாரை (Pashana Pabbatha Rajamaha Vihara) என்கிற பௌத்த ஆலயம் அமைத்திருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி திருகோணமலை மாவட்டத்தில் முகத்துவாராம் பிரதேசத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் முழுமையாக அழிக்கப்பட்டு அந்த கோவில் இருந்த இடத்தில் இப்போது “லங்கா பட்டுன சமுத்திரகிரி” என்கிற பெயரில் புதிய விகாரை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

திருகோணமலையில்  பட்டணமும் சூழலும் பிரதேசசபை நிர்வாகத்தில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள்  மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரபட்டு பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக உரிமை கோருகிறார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை ஆலயத்தில் வழிபாடு நடத்த  தொல்லியல் திணைக்களம்  தடை விதித்திருக்கிறது. கந்தசாமி மலை பௌத்த மத பூமி என உரிமை கோரி இருக்கிறார்கள்  இவ்வாறு கிழக்கில் உரிமை கோரியது மட்டுமல்லாமல் வடக்கிலும் உரிமை கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை  ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் . நீதிமன்ற உத்தரவுகளை மீறி கோவில் வளாகத்தில் புத்த பிக்கு ஒருவரின் இறுதி கிரியைகள்  நடத்தப்பட்டன.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடத்த தொடர்ச்சியாக தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதோடு ஆலய பரிபாலன சபை  உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் சூலத்தை அகற்றியதோடு நீதிமன்ற உத்தரவுகளை மீறி பௌத்த விகாரை ஒன்றை நிறுவும் வேலைகளை தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஆலய சூழலில் குருந்த அசோகராம என்கிற புராதன பௌத்த ஆலயம் இருந்ததாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது.

காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலயம் ஒன்று இடிக்கப்பட்டு ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக பௌத்த பிக்குகள் உரிமை கோரி வரும் நிலையில் குறித்த ஆலயத்தின் முன் கதவு , மூலஸ்தான விக்கிரம்  என்பன அடித்து நொருக்கப்பட்டு இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக  முல்லைத்தீவு குந்தூர் மலை சிவன் ஆலயத்தில் மக்கள் தம் வழிபாடுகளை செய்துவந்த நிலையில் அங்கு சென்று வழிபாடுகளை நடத்தவும், உட்பிரவேசிக்கவும் தொல்லியல் திணைக்களத்தினர் மக்களுக்கு  தடைவிதித்திருந்தனர்.

அதுமட்டுமல்ல வவுனியா வடக்கில் அமைந்திருக்கும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு மக்கள் சென்று தம் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த நிலையில் தொல்லியல் திணைக்களத்தினர் தொல்லியல் நிலமாக அடையாளப்படுத்தி இன்று குறித்த இடத்திற்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

அதுமட்டுமல்ல செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்  என தொடங்கி அண்மையில்  உருத்திரபுரம் சிவன் ஆலயம்,  என  எந்த பதியிலும் இல்லாதவாறு வடக்கு கிழக்கில் மட்டும் தமிழ் மக்களின்  வழிபாட்டிடங்களை தொல்லியல் திணைக்களத்தினர்  பொய்யான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் காட்டி அரச நிலமாக அடையளப்படுத்தி நிலங்களை  அபகரித்திருக்கின்றார்கள். இவ்வாறு திட்டமிட்டு நடைபெறும் காணி அபகரிப்புக்களை எம்மால் என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது.

IMG 20210507 082742 வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் - பாலநாதன் சதீஸ்

இலங்கை அரசு ஒவ்வொரு அணுகுமுறைகளை கையாண்டு  தமிழ் மக்களின்  நிலங்களையும், வழிபாட்டு தலங்களையும்  அபகரிப்பது சரியானதல்ல,  தொடர்ச்சியாக இவ்வாறு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை  அபகரித்தால் எம் நிலை என்னவாகும். வாழ்விடங்களையும் இழந்து வழிபாட்டிடங்களையும் இழந்து  தமிழ் மக்கள் மீண்டும் நிற்கதியாய் தான் நிற்கவேண்டும். இதற்கான தீர்வுகளையும் பெற்றுத்தர யாரும் இல்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களத்தினரும், வனவள திணைக்களத்தினரும் இவ்வாறு தாெடர்சியாக தமிழ் மக்களின் நிலங்களையும், வழிபாட்டிடங்களையும்  அபகரிப்பதும், சொந்தம் கொண்டாட முயல்வதும் யாராலும்  ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.