Home ஆய்வுகள் றுவாண்டா இனவழிப்பில் பிரான்சுக்கு பங்கு இருக்கிறது: அதிபர் மக்ரோனின் பகிரங்க அறிவிப்பு – தமிழில்:...

றுவாண்டா இனவழிப்பில் பிரான்சுக்கு பங்கு இருக்கிறது: அதிபர் மக்ரோனின் பகிரங்க அறிவிப்பு – தமிழில்: ஜெயந்திரன்

ஆபிரிக்கா கண்டத்திலுள்ள றுவாண்டா (Rwanda) நாட்டை அண்மையில் தரிசித்த பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron)  1994ம் ஆண்டில் றுவாண்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலையில் பிரான்சு நாட்டுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதைப்  பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார். மேற்படி இனப் படுகொலையில் பிரான்சு வகித்த பங்குக்காக மன்னிப்புக் கேட்ட மக்ரோன் முறையான விதத்தில் இதற்காக மன்னிப்புக் கோரவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

றுவாண்டாவின் தலைநகரான கிகாலியில் (Kigali) 250,000 மக்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இனப் படுகொலை நினைவில்லத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் அவர் ஆற்றிய அதி முக்கியத்துவம் வாய்ந்த உரையின் போது இக்கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் 1994ம் ஆண்டு, பெரும்பான்மையாகத் துட்சி (Thutsi) இனத்தவர்களையும் மற்றும் மிதவாத ஹுட்டு (Hutu) இனத்தவர்களையும் உள்ளடக்கிய எட்டு இலட்சம் எண்ணிக்கையான மக்களை ஏப்பிரல் மாதத்திலிருந்து 100 நாட்களில் ஹுட்டு (Hutu) இராணுவக் குழுக்கள் மிகவும் கோரமான முறையில் படுகொலை செய்திருந்தன. தற்போதைய அதிபர் ககாமேயின் (Kagame) தலைமையில் றுவாண்டா நாட்டுப்பற்றாளர் முன்னணி (Rwandan Patriotic Front – RPF) றுவாண்டாவுக்குள் முன்னேறி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே இப்படுகொலைகள் ஒரு முடிவுக்கு வந்தன.

 “றுவாண்டாவில் ஓர் இனப் படுகொலை நடைபெறப் போகிறது என்று பிரான்சுக்கு வழங் கப்பட்ட எச்சரிக்கையை பிரான்சு கவனத்தில் எடுக்காமல் தொடர்ந்தும் இனப் படுகொலை அரசுக்குத் தனது ஆதரவை அளித்து வந்தது” என்று மக்ரோன் கூறினார்.

 “பணிவுடனும் மரியாதையுடனும் உங்களோடு இந்த இடத்தில் நின்று கொண்டு, இவ்வினவழிப்பில் எங்களது பங்கை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட இனவழிப்புக்கு பிரான்சு எந்த விதத்திலும் உடந்தையாக இருக்கவில்லை என்பதையும் நான் கூறிக் கொள்கிறேன்.”

 “இனப் படுகொலை தொடர்பான உண்மையை ஆய்ந்து அறிவதற்குப் பதிலாக மிக நீண்ட காலமாக அமைதியைப் பேணியதன் மூலம் றுவாண்டா மக்களுக்கு பிரான்சு துன்பத்தைக் கொடுத்திருக்கிறது.”

 “மிகப் பயங்கரமான அந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் உயிர் பிழைத்திருக்கிறவர்களால் மட்டும் தான் எங்களை மன்னிக்க முடியும். அந்த மன்னி ப்பை எங்களுக்குத் தாருங்கள் என்று இப்போது நான் கேட்கிறேன்.” மக்ரோன் ஆற்றிய உரையை றுவாண்டாவின் அதிபரான ககாமே பாராட்டினார்.

“ஒரு முறையான மன்னிப்புக் கோரலை விட அவரது வார்த்தைகள் பெறுமதி வாய்ந்தவை. அது தான் உண்மை” என்று கிகாலியில் இரு தலைவர்களும் ஒன்றாகச் சந்தித்த பின் நடத்திய ஊடகவியலாளர்   மாநாட்டில் ககாமே தெரிவித்தார்.

இதற்கு முதல், பிரான்சின் அதிபர்களாக இருந்தவர்கள் இனப்படுகொலை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களை விட மக்ரோன் ஒருபடி மேலே போயிருந்தார். இருப்பினும் மக்ரோன் ஒரு முறையான மன்னிப்பைக் கோருவார் என்று றுவாண்டாவில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

171213111457 french marines rwanda றுவாண்டா இனவழிப்பில் பிரான்சுக்கு பங்கு இருக்கிறது: அதிபர் மக்ரோனின் பகிரங்க அறிவிப்பு - தமிழில்: ஜெயந்திரன்
 

மக்ரோன் ஒரு தெளிவான மன்னிப்பை  முன்வைக்காதது தொடர்பாக தாம் ஏமாற்றம் அடைந்திருப்பதாக றுவாண்டாவில் இனப் படுகொலையிலிருந்து உயிர் தப்பியவர்களால் உருவாக்கப்பட்டுள்ள முக்கிய குழுவான இபூக்கா (Ibuka) தெரிவித்தது.

மக்ரோன் மன்னிப்பைக் கோரவில்லை என்பது உண்மை தான். ஆனால் இனப் படுகொலை உண்மையில் எப்படி நடந்தது? இதில் அவர்களது பங்கு என்ன? எப்படிப்பட்ட விடயங்களைச் செய்ய அவர்கள் தவறினார்கள் போன்ற விடயங்களை அவர் தெளிவுபடுத்தினார். இது முக்கியமான விடயம். ஏனென்றால் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட எங்களை அவர் புரிந்து கொள்கிறார் என்பது இதன் மூலம் புலனாகிறது.

காலனீய மனப்பாங்கு பிரெஞ்சு அதிகாரிகளின் கண்களைக் குருடாக்கி விட்டது. இனப் படுகொலையை முன்கூட்டியே இனங்கண்டு கொள்ளத் தவறியது தொடர்பாக பிரெஞ்சு அரசுக்கு மிகவும் பாரதூரமான பொறுப்பு இருக்கிறது என்று ஒரு பிரெஞ்சு விசாரணைக்குழு அண்மையில் அறிக்கை வெளியிட்ட பின்னணியில் தான் றுவாண்டாவுக்கான மக்ரோனின் பயணம் அமைந்திருந்தது. இனப் படுகொலையில் பிரான்சு நேரடியான பங்கு வகித்ததாக மேற்குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கவில்லை.

இனப் படுகொலையில் பிரான்சு நேரடியாகப் பங்கு வகித்ததாக இதற்கு முதல் குறிப்பிட்டிருந்த ககாமே, பிரெஞ்சு விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கை தனது நாட்டில் வாழுகின்ற மக்களைப் பொறுத்த வரையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.

 “இனப் படுகொலையில் பிரான்சு வகித்த பங்கை றுவாண்டா மக்களால் மறக்க முடியாது. ஆனால் மன்னிக்க முடியும்”  என்று ஹுட்டு இனத்தவர்களின் அரசுக்கு விசுவாசமானவர்களால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த போராளிகளின் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி, அன்றிலிருந்து அரசியலில் பலமான ஆளுமையாக இன்று வரை திகழ்கின்ற ககாமே தெரிவித்தார்.

இனவழிப்பு நடைபெற்ற காலத்தில் பிரெஞ்சு அதிபராகப் பணிபுரிந்த பிரான்சுவா மிற்றரோனின் (Francois Mitterrand) றுவாண்டா தொடர்பான ஆவணக் காப்பகத்தை திறப்பதற்கு ஏப்பிரலில் மக்ரோன் சம்மதம் அளித்திருந்தார்.

இனப் படுகொலையை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் றுவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருந்ததை பிரான்சு முற்றுமுழுதாக அறிந்திருந்தது, அதை மேற்கொள்வதற்கான உதவியை றுவாண்டா அரசுக்கு வழங்கியது என்பது மட்டுமன்றி றுவாண்டாவின் அப்போதைய அதிபராக இருந்த ஜூவெனால் ஹபியறிமானாவுக்கு (Juvenal Habyarimana) அசைக்க முடியாத ஆதரவை வழங்கி அவ்வினவழிப்பை முன்னெடுப்பதற்கு வழிவகுத்தது என்று பிரான்சைக் குற்றஞ்சாட்டிய தனது சொந்த அறிக்கையை ஆவணக் காப்பகம் தொடர்பாக மக்ரோனின் அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் றுவாண்டா வெளியிட்டது.

ஹபியறிமானா பயணஞ் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இனப் படுகொலையை முன்னெடுக்கும் செயற்பாடுகள் றுவாண்டாவில் கட்டவிழ்த்து விடப்பட்டன. பிரெஞ்சு அதிகாரிகள் இனப்படு கொலையாளிகளுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து, அறிவுரைகளை வழங்கி, வேண்டிய உபகரணங்களை விநியோகம் செய்தது மட்டுமன்றி தொடர்ந்து றுவாண்டா அரசைப் பாதுகாக்கவும் தவறவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. இவ்வளவையும் செய்த பிரான்சு இவ்வளவு காலமாகத் தனது பங்கை மூடிமறைத்தது என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மக்ரோனைப் பொறுத்த வரையில் அவருக்கு இது ஒரு இக்கட்டான நிலை என்று கிகாலியிலிருந்து செய்திகளைத் தொகுத்து வழங்கிய அல்ஜசீரா ஊடகவியலாளரான மல்கம் வெப் (Malcolm Webb) தெரிவித்தார்.

மக்ரோனைப் பொறுத்த வரையில், ஆபிரிக்காவில் பிரான்சு தனது நலன்களை எப்படிப் பேணலாம் எனச் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதே வேளையில் றுவாண்டா நாட்டுப் பற்றாளர் முன்னணியின் கொள்கைக்கும் சிந்தனைக்கும் ஏற்றவாறு பிரான்சும் தன்னுடைய அணுகுமுறையை வகுத்து, போல் ககாமேயுடனும் (Paul Kagame) றுவாண்டா அரசுடனும் கூட்டுச்சேர வேண்டிய தேவை பிரான்சுக்கு இருக்கிறது. இனப் படுகொலை தொடர்பாகவும் 1990 இல் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாகவும் பேசப்படும் விடயங்களில் இன்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்று வெப் மேலும் தெரிவித்தார்.

இன்னொரு புறத்தில், பிரான்சில் இன்னொரு தேர்தலுக்கு மக்ரோன் தயாராகிக் கொண்டிருக்கிறார். எனவே தீவிர வலதுசாரிகளின் விமர்சனத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது. றுவாண்டாவில் அவர் மன்னிப்புக் கோரியிருந்தால் பிரான்சின் தீவிர வலதுசாரிகள் அதை வைத்து மக்ரோனை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பார்கள். அத்துடன் இராணுவத்திலுள்ள சக்தி வாய்ந்த ஆளுமைகளும் அதனை விரும்பியிருக்க மாட்டார்கள்.

றுவாண்டாவிலிருந்து தென் ஆபிரிக்காவுக்கு மக்ரோன் பயணமானார். அங்கே அவர் அதிபர் சிறில் றமபோசாவைச் சந்தித்து கோவிட்-19 தொடர்பாகவும் பிராந்திய நெருக்கடிகள் தொடர்பாகவும் பேச்சுக்களை முன்னெடுத்தார்.

நன்றி: அல்ஜசீரா

Exit mobile version