றுவாண்டா இனப்படுகொலையின் பொறுப்பை சுமக்கும் பிரான்ஸ் ! – மக்ரோன் நியமித்த குழு அறிக்கை

1994 இல் உலகை உலுக்கிய றுவாண்டா துட்சி இனப்படுகொலையில் பிரான்சிற்கு நேரடியாக பங்கேற்காது விடினும், தீவிரமான பெரும் பொறுப்பு  இருக்கிறது என்று மிக முக்கிய உள்நாட்டு விசாரணைக்குழு ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990 முதல் 1994 காலப்பகுதியில் றுவாண்டா தொடர்பான பிரான்ஸின் கொள்கை ‘கருத்தியல் ரீதியில் குருட்டுத்தனமானது’ (ideologically blind) என்று அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

படுகொலைக்கு முன்னரும், அது நிகழ்ந்த போதும், அதன் பின்னரும் பிரான்ஸ் வகித்த பங்கு என்ன என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அதிபர் மக்ரோன் நியமித்த வரலாறுத்துறை நிபுணர்கள் அடங்கிய விசேட குழு அதன் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை எலிஸே மாளிகையிடம் கையளித்துள்ளது.

100 நாட்களில் சுமார் எட்டு லட்சம் துட்சி இன மக்கள் படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் பிரான்ஸில் ஆட்சியில் இருந்த அதிபர் பிரான்ஷூவா மித்ரோனின் றுவாண்டா தொடர்பான கொள்கைளையே அறிக்கை குருட்டுத்தனமானது  என வர்ணிக்கிறது.

இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இன்னமும் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகின்ற இந்த விவகாரத்தை வெளிப்படையான விசாரணைகளின் மூலம் தெளிவுபடுத்த பிரான்ஸ் முயன்று வருகிறது.

இனப் படுகொலையில் பிரான்ஸின் பங்கு என்ன என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் ஒரு குழுவை அதிபர் மக்ரோன் நியமித்திருந்தார். பிரபல வரலாறு ஆசிரியர் Vincent Duclert அவர்களைத் தலைவராகக் கொண்ட 14நிபுணர்கள் அடங்கிய அந்தக் குழுவுக்கு, றுவாண்டா தொடர்பான ரகசிய அரச ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையே தற்போது அதிபர் மக்ரோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையை றுவாண்டா அரசு வரவேற்றுள்ளது. எனினும் நீண்டகாலமாக அது குற்றம் சாட்டி வருவதுபோல் இனப்படுகொலையில் பிரான்ஸிற்கு நேரடியான பங்கு இருந்தது என்பதை அறிக்கை நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.