றிசாட் பதியூதீனின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வவுனியா கண்டிவீதியில் இன்று (26) காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

‘புனித நோன்பு காலத்தில் பொய்யான கதையை கூறி அவரை கைது செய்துள்ளனர். அவரை கைதுசெய்த முறையையும் அந்த அமைப்பையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இரண்டு வருடமாக ஒரே குற்றச் சாட்டையே இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எமது தலைவர் கொலைசெய்யக்கூடியவர் அல்ல. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவரை வெளியிலே விடுங்கள் உங்களது புலனாய்வுதுறையூடாக நீதியாக விசாரியுங்கள். அவர் எங்கும் ஓடமாட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்குங்கள். எனவே ஜனாதிபதி பிரதமர் அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். அவர் எப்போது விடுவிக்கப்படுகின்றாரோ அன்றே எனது போராட்டம் நிறுத்தப்படும்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்து அவர்களது குடும்பங்களுடன் நின்மதியாக வாழ்வதற்கு வழிசெய்யவேண்டும்’ என்றார்.