ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்க ஆசியான் கூட்டமைப்புக்கு கோரிக்கை

ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்க ஆசியான் கூட்டமைப்புக்கு கோரிக்கை தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 37வது உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்கவும் ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக தஞ்சம் கோரும் மற்றுமொரு நெருக்கடி உருவாகுவதையும் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆசியான் கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளன. 

Save the Children, World Vision மற்றும் Lutheran World Federation  உள்ளிட்ட அமைப்புகள் விடுத்துள்ள இக்கோரிக்கையில், பருவமழை காலம் முடிந்து கடலில் பயணிப்பதற்கான உகந்த காலம் நெருங்கும் நிலையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அகதிகள் ஆபத்தான கடல் வழிப் பயணங்களை மேற்கொள்ளும் அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா.அகதிகள் முகமையின் கணக்குப்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடா வழியாக சுமார் 2,400  அகதிகள் படகு வழிப் பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றனர். 

இவ்வாறு பயணிக்கும் அகதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் எனக்கூறப்படுகின்றது. அதே போல், பெரும்பாலான அகதிகள் வங்கதேச முகாம்களிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள் என்றும் இவர்களில் பெரும்பாலானோர் மனித கடத்தல்காரர்கள் கையில் சிக்கி பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் முகமை குறிப்பிடுகின்றது.