Tamil News
Home செய்திகள் ரெலோ யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேன்: சர்ச்சைகளின் மத்தியில் செல்வம் அறிவிப்பு

ரெலோ யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேன்: சர்ச்சைகளின் மத்தியில் செல்வம் அறிவிப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமி (சுரேன்) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த கட்சியின் யாழ் மாவட்டக் கிளைக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் களேபரத்தின் பின்னணியில் அவசர அவசரமாக தனது தெரிவை செல்வம் அடைக் கலநாதன் அறிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் –

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூலம் எமது கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை (சுரேன்) வெற்றி வேட்பாளராக களமிறக்குவதென 19.01.2020 அன்று வவுனியாவில் இடம் பெற்ற தலைமைக்குழு கூட்டத்திலும் 20.01. 2020 அன்று கூடிய யாழ். நிர்வாகக்குழுக் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

யாழ். தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடல்களின் பின் நீண்ட அரசியல் வரலாறு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரும் சிறந்த கல்வியலாளருமான சுரேந்திரன் குருசுவாமிக்கு ஒதுக்குவதன்மூலம் நிர்வாகத் திறனும் , மும்மொழித் தேர்ச்சியும் ஆளுமையும் மிக்க ஒருவரை எமது கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியும் என்பதுடன் இவரின் வெற்றியின் மூலம் யாழ். மாவட்டத்தில் எமது கட்சி இழந்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மீளப்பெற முடியுமெனவும் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், எமது கட்சியின் செயற்பாட்டாளர்கள் தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் எமது வெற்றி வேட்பாளருக்கு உங்களது பூரணஆதரவினை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Exit mobile version