ரெலோவில் உச்சமடைந்துள்ள பூசல் -மற்றுமொரு மூத்த உறுப்பினரும் வெளியேறினார்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் நாளை வெளியிடவுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூலமாக கட்சியின் தேசிய அமைப்பாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதாக அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அதனையடுத்தே விந்தன் கனகரட்ணம் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து விலகுவதான அறிவிப்பை தலைமைக்குத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு நாளை உத்தியோகபூர்மாக அறிவிக்க உள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

எனினும் ரெலோவிலிருந்து விலகி விந்தன் கனகரட்ணம், வேறு கட்சியில் இணைவது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்தவிட்டார். அதுதொடர்பில் எந்தத் தீர்மானத்தையும் தான் எடுக்கவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் மூத்த உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா மற்றும் எம்.கே சிவாஜிலிங்கம் விலகி புதுக்கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது விந்தன் கனகரட்ணத்தின் வெளியேற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.