Tamil News
Home செய்திகள் ரெலோவின் விழாவில் குழப்பம்! நிலைமையை கட்டுப்படுத்திய பொலிஸார்

ரெலோவின் விழாவில் குழப்பம்! நிலைமையை கட்டுப்படுத்திய பொலிஸார்

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ரெலோவின் 50 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்றக் காலை ஆரம்பமான நிகழ்வுகள் பகல் முழுவதும் சுமூகமாக இடம்பெற்ற நிலையில் மாலையில் குழப்பம் இடம்பெற்றது.
.
ரெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மண்டப வாயிலுக்குவந்த சில இளைஞர்கள், ரெலோவின் கொடியை இறக்க முற்பட்டனர். இதனையடுத்து ரெலோ உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது அங்கு வந்த இளைஞர்கள், ரெலோவின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் குகனின் படத்தை ஏன் முன்னால் காட்சிப்படுத்தவில்லை எனவும், யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத் தில் இரு இளைஞர்களைப் புளொட் அமைப்பினர் சுட்டுக் கொன்றிருந்தனர், தற்போது புளொட் தலைவர் சித்தார்த்தனைக் கூப்பிட்டு விழா செய்கிறீர்களா எனவும் தர்க்கம் விளைவித்தனர்.

அங்கு ரெலோஉறுப்பினர்களும் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிஸாரின் துணையுடன் நிலைமையைக் கட்டுப்படுத்தினார். அங்கு நடந்த முரண்பாட்டில் தாக்குதலுக்கு இலக்கானார் எனத் தெரிவித்து ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் ரெலோவால் வவுனியா பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றபோது அங்கு நின்ற அரச அதிகாரி ஒருவர் மாவை சேனாதிராசாவைப் பார்த்து “இவர் ஏன் இங்கு வந்தவர்? யார் இவரைக் கூப்பிட்டது?” எனச் சத்தம் எழுப்பிய நிலையில் ஏற்பாட்டாளர்கள் அவரைச் சமரசப்படுத்தினார்கள்.

Exit mobile version