Tamil News
Home செய்திகள் ரிஷாட் எந்த நேரமும் கைதாகலாம் – இரு பொலிஸ் குழுக்கள் மன்னார் விரைவு

ரிஷாட் எந்த நேரமும் கைதாகலாம் – இரு பொலிஸ் குழுக்கள் மன்னார் விரைவு

இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அமைந்துள்ள இல்லங்களுக்குப் பொலிஸார் சென்றுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

எனினும் கொழும்பிலுள்ள வீட்டில் நேற்றிரவு பொலிஸ் குழுக்கள் சென்ற போது ரிஷாட் இருக்கவில்லை. இதனையடுத்து இரண்டு பொலிஸ் குழுக்கள் மன்னாருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பெறுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதற்கமைய செயற்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் கொழும்பு கோட்டை நீதிவானிடம் நேற்றுப் பிற்பகல் பிடியாணை கோரி விண்ணப்பம் செய்தனர். இதன்போது, பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் நபர் ஒருவரைக் கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்த நீதிவான், இது தொடர்பான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

இந்தநிலையிலேயே ரிஷாட் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளில் அமைந்துள்ள இல்லங்களுக்கு 6 பொலிஸ் குழுக்கள் சென்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்துச் சென்றிருந்தார் என்று ரிஷாத் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version