Tamil News
Home செய்திகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்தை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருடன் இறந்த ஒருவரது மகனான எஸ்.அப்பாஸ் குழுவினர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர், இந்த வழக்கை வியாழக்கிழமை பரிசீலித்தனர்..

“இந்த மனுவில் விசாரணைக்கு ஏற்ற உரிய வாதம் ஏதும் இல்லை” என்று கூறி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டர். ராஜீவ் கொலையில் உடன் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வேண்டும் என்றும் அப்பாஸ் கோரினார்.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432வது பிரிவின் கீழ் 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கில் மத்திய சட்டத்தின் கீழ், மத்திய புலனாய்வு நிறுவனம் புலன் விசாரணை மேற்கொண்டதால், மத்திய அரசுடன் ஆலோசித்து விடுதலை செய்ய வேண்டும் என்று இதே சட்டத்தின் 435ஆவது பிரிவு  கூறுகிறது.

எனவே, மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வருவதற்காக காத்திருக்கப் போவதில்லை என்றும், உடனடியாக அவர்களை விடுதலை செய்யப் போவதாகவும் கூறியது.

ஆனால், ஆலோசனை என்பது மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது என்று வாதிட்ட மத்திய அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு, குற்ற நடைமுறைச் சட்டத்தின் 435 (2) பிரிவின் கீழ் மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரித்த வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்றால், மத்திய அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தின்  161ன் பிரிவிகீழ் அவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படாமல் இருக்கிறது என்று இரண்டு முறை உச்ச நீதிமன்றம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியிருந்தது.

இந்நிலையில் 2018 செப்டம்பர் மாதத்தில், இந்த ஏழுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, அதை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரையாக அனுப்பியது. அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியாது. இந்நிலையில் இந்தப் பரிந்துரை மேல் முடிவெடுப்பதை ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில்தான், ஏழு பேர் விடுதலையை நிறுத்தவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Exit mobile version