ராஜீவ் காந்தி கொலை வழக்கு இதுவரை நடந்தது என்ன?-வழக்கறிஞர் பெ.தமயந்தி

* 1991 மே 21இல் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். 26 பேர் மீது சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

* 1998 ஜனவரி 28இல் பேரறிவாளன் உட்பட 26 பேருக்கும் சென்னை தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் அவர்களில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

* 1999 ஒக்டோபர் 17இல் 7 பேரின் கருணை மனுக்களை தமிழக ஆளுநர் நிராகரித்தார். பின்னர் நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

* 2000 ஏப்ரல் 28இல் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இந்த கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

WhatsApp Image 2020 11 14 at 1.10.46 AM 1 1 ராஜீவ் காந்தி கொலை வழக்கு இதுவரை நடந்தது என்ன?-வழக்கறிஞர் பெ.தமயந்தி

* 2011 ஓகஸ்ட் 26இல் 11 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கருணை மனுக்களை நிராகரித்தார்.

* 2011 ஓகஸ்ட் 30இல் ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* 2014 பெப்ரவரி 18இல் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

* 2014 பெப்ரவரி 19இல் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இம்முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு போனது மத்திய அரசு. இதையடுத்து 7 பேரை விடுதலை செய்யும் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து அரசியல் சாசன குழுவிற்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.

* 2015 ஜூலை 11இல் 7 பேர் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டது.

* 2015 டிச.2இல் 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது எனக் கூறியது உச்சநீதிமன்றம்.

* 2016 பெப்ரவரி 14இல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உள்துறை அமைச்சகமானது 7 பேர் குறித்த தகவல்களைக் கோரியது, தமிழக அரசின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு.

* 2016 மார்ச் 2இல் 7 பேர் விடுதலைக்காக மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் மத்திய அரசு மறுத்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது,

* 2018 ஏப்ரல் 16இல் 7 பேரையும் விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.

* 2018 ஓகஸ்ட் 11இல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போதும் 7 பேரையும் விடுதலை செய்ய மறுத்து வாதிட்டது மத்திய அரசு.

* 2018 செப்டம்பர் 6 இல் 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி வழக்கை முடித்து வைத்தது.

“ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு  30 ஆண்டுகள் ஆகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலந் தாழ்த்துவது என்பது மிகமோசமான மனித உரிமை மீறல்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 29 ஆண்டுகளுக்கு முன் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி இரவு சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது.

விசாரணை முடிவடைந்ததும் அடுத்த நாள் காலையில் பேரறிவாளனை அனுப்பி வைப்பதாக விசாரணை அதிகாரிகள் உறுதியளித்ததை நம்பி  பேரறிவாளனை அவரது பெற்றோர் எந்த அச்சமும் இன்றி அனுப்பி வைத்தனர்.

ஆனால், விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்து எழுதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக அவர் பெயரை இணைத்து விட்டனர்.

தகுதியின் அடிப்படையில் பார்த்தாலும், மனிதநேய அடிப்படையில் பார்த்தாலும் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டியவர் ஆவார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திரித்துப் பதிவு செய்ததன் மூலம் அவருக்கு தூக்குத் தண்டனை கிடைக்க தாம் காரணமாகி விட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டதுடன், அதை உச்ச நீதிமன்றத்தில் மனுவாகவே தாக்கல் செய்திருக்கிறார்.

இப்படியிருக்க, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய தமிழக ஆளுநர் எந்த மனிதநேயமும் இல்லாமல் அது குறித்த பரிந்துரையை கிடப்பில் போட்டு இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது என்பது மோசமான  மனித உரிமை மீறல் என்பதைத்தவிர வேறு என்ன..?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் அதை விட இரு மடங்கு தண்டனையை அனுபவித்து விட்ட நிலையில், அவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவ்வாறு அனுப்பி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன்மீது  ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றால் அதற்கு அரசியல் காழ்ப்புணர்வைத் தவிர வேறு என்னவாக இருந்துவிட முடியும்…??!!

அமைச்சரவையின் பரிந்துரை மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த விஷயத்தில் ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் தொடர்ந்து 30ஆவது ஆண்டாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே இந்த 30 ஆண்டுகளில் வாழ்நாளின் பெரும்பகுதியை இழந்து விட்டனர். இனியாவது அவர்கள் தங்களின் வாழ்நாளை குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும்.

உண்மையான குற்றவாளிகளை புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடியாத இந்திய புலனாய்வுத் துறை, இந்த வழக்கில்  சில அரசியல் நிர்ப்பந்தங்களின் சூழ்ச்சிகளுக்கு அடிபணிந்து திட்டமிட்டு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற நபர்களையே ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளாக பொய்யான சாட்சிகளை கொண்டு நிரூபிக்க செய்தும் கூட இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதற்கு சாட்சியாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒப்புதல் வாக்குமூலம் அமைகிறது

WhatsApp Image 2020 11 14 at 1.17.49 AM 2 ராஜீவ் காந்தி கொலை வழக்கு இதுவரை நடந்தது என்ன?-வழக்கறிஞர் பெ.தமயந்தி

மேலும் குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில்,  தூக்குத் தண்டனை  விதிக்கப்பட்ட  சாந்தன், முருகன் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களாலும், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களாலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் இதுநாள் வரை நடந்துள்ளது.  குறிப்பாக தமிழகத்தில் நடந்த எழுவர் விடுதலைக்கான போராட்டங்களில் உச்சபட்சமாக தன் உயிரையே தீக்கங்குகளுக்கு தின்னக் கொடுத்து  செங்கொடி  மாய்த்துக் கொண்டார். மேலும் தமிழகத்தில் பெருத்திரளாக வழக்கறிஞர்கள் எல்லாம் பெரும் போராட்டங்களை, சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னையிலும் சேலத்திலும் பெண் வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டங்களை எல்லாம் முன்னெடுத்தனர்.  மேலும் பல்வேறு தமிழ் உணர்வாளர்களும், ஈழ ஆதரவாளர்களும், பல்வேறு புரட்சிகர முற்போக்கு சக்திகளும் கூட தமிழகம் முழுக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இத்தனை அழுத்தங்கள் தமிழகம் முழுக்க கொடுக்கப்பட்டாலும்கூட, சட்டத்தின்படியும், நியாயத்தின்படியும், மனிதநேய அடிப்படையிலும், தங்களது வாழ்நாளில் பாதியை சிறையிலேயே கழித்ததன் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் உடனடியாக  சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட  எழுவரின் விடுதலையை தமிழக ஆளுநர்  பரிசீலனை செய்து  எழுவரின் விடுதலையை உறுதிசெய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.