Tamil News
Home உலகச் செய்திகள் ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளே அமெரிக்காவின் உளவாளி?

ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளே அமெரிக்காவின் உளவாளி?

ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளேயே அமெரிக்காவின் உளவாளி ஒருவர் இருந்ததாக வெளியான செய்திகளால் அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளரும், பிரபல தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.
இதன் பின்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா  தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையில் முக்கிய பதவியில் இருந்த அமெரிக்காவின் உளவாளி, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடும்படி தமது அதிகாரிகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் அளித்தார் என்று அமெரிக்காவின் சிஎன்என் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின.
அந்த உளவாளி கடந்த 2017ஆம் ஆண்டில், அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா நடத்தி வரும் விசாரணையால் தமது அடையாளம் வெளிப்பட்டு விடும் என்றும், டிரம்ப் தன்னை காட்டி கொடுத்து விடுவார் என்று அஞ்சியும், ரஷ்யாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறி விட்டதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ரஷியாவைச் சேர்ந்த ஊடகம் அதிபர் புதினின் வெளியுறவு விவகார ஆலோசகர் யூரி உஸாகோவின் உதவியாளர் ஓலெக் ஸ்மோலன்கோவ்தான் அந்த உளவாளி என்றும், வாஷிங்டனில் உள்ள ரஷிய தூதரகத்தில் முன்பு அவர்  பணியாற்றியதாகவும், ரஷியாவை விட்டு மனைவியுடன் வெளியேறிய அவர், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ளஸ்டாபோர்டு காட்டுக்குள் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்திகளை மறுத்துள்ள ரஷிய அதிபர் மாளிகை, அவர் அமெரிக்காவின் உளவாளியா, இல்லையா என்பது தெரியாது என்றும், சம்பந்தப்பட்ட ஓலெக் ஸ்மோலன்கோவுக்கு புதினுடன் நேரடி தொடர்பு கிடையாது, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உளவு  அமைப்போ, இதை உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை. அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், இந்த செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது அமெரிக்க உளவு அமைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பின் இயக்குனராக இருந்த தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், அந்த செய்திகளை தாமும் படித்ததாகவும், ஆனால் அதில் போதிய துல்லியமில்லை என்றும் பதிலளித்தார். இத்தகைய செய்திகளால், பலரின் உயிருக்கு அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாகவும் பாம்பேயோ கூறினார்.
Exit mobile version