Home செய்திகள் ரணில் பசில் பேச்சுக்களால் ராஜபக்ஷ குடும்பத்தினா் கடும் அதிருப்தி?

ரணில் பசில் பேச்சுக்களால் ராஜபக்ஷ குடும்பத்தினா் கடும் அதிருப்தி?

basil ranil mahinda ரணில் பசில் பேச்சுக்களால் ராஜபக்ஷ குடும்பத்தினா் கடும் அதிருப்தி?ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சமீப காலங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்படும் நிலையில், இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ராஜபக்ச குடும்பத்தினர் விரும்பவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல்களின் மூலம் பசில் ராஜபக்ச, ஜனாதிபதிக்கு உதவி செய்கின்றாரா என ராஜபக்ச குடும்பத்தினர் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவாராயின் அது நாமல் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டே இருவருக்குமிடையிலான சந்திப்புகளை அவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டத்தில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா முன்னிலைப்படுத்தப்பட்டமையால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக அவர் களமிறக்கப்படுவாரா என்ற பேச்சும் எழுந்துள்ளது. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேரா போட்டியிட்டால் அது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்துமெனவும் இதனால் ஜனாதிபதி போட்டியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டிய நிலை ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி குறைந்துள்ளமையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை தொடர்ந்தும் தாமதித்து வருவதாக குறிப்பிட்டாலும் தற்போது பொதுஜன பெரமுனவின் வாங்கு வங்கியில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால் கட்சியின் சார்பாக வேட்பாளரை அறிவிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரால் குறைந்தது 20 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடிந்தாலும் அது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதன்மூலம் சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்புகள் அதிகரிக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான தமது திட்டங்களை சஜித் பிரேமதாச முறையாகச் செயற்படுத்தினால் அவரால் 50 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் தற்போது பொதுமக்களிடையே, யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான தீர்க்கமான முடிவு காணப்படவில்லை எனவும் தற்போதைய வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் மீது அவர்களின் அதிருப்தி தொடர்ந்தும் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் அந்த மனநிலையில் மாற்றம் ஏற்படுமென குறிப்பிடப்பட்டாலும் இன்னும் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றனர் என்பது தொடர்பில் வெளிப்படையான உத்தரவாதத்தை வழங்கவில்லை.

கடந்த மேதினக் கூட்டத்தில் ஒவ்வொரு கட்சிகளும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை திரட்டுவதாக குறிப்பிட்டிருந்தாலும் அதிகபட்சமாக 35 ஆயிரம் வரையான ஆதரவாளர்களையே கட்சிகளால் கொண்டு வர முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version