யுனிசேபின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர் சிறுவர் நேய நகராக மாறுகின்றது

மட்டக்களப்பு மாநகரை சிறுவர் நேய நகராக மாற்றுவதற்கான நடவடிக்கைக்கு பெற்றோரும் சிறுவர்களும் தங்களது பங்களிப்பினையும் ஆலோசனைகளையும் வழங்க முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரத்தினை சிறுவர் நேய நகராக மாற்றுவது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வும் சர்தேச சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான தின நிகழ்வும் இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

யுனிசேபின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகரசபையினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகர ஆணையாளர் க.சித்திரவேல்,பிரதி ஆணையாளர் மற்றும் யுனிசெப் பிரதிநிதிகள்,மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்

இதன்போது சிறுவர் நேய நகராக மாற்றுவதற்கு பாடசாலையில் உள்ள மாணவர்களின் ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்படவுள்ள ஆலோசனைப்பெட்டி முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது.

ஆத்துடன் மட்டக்களப்பு மாநகரசபையின் ஓராண்டு பூர்த்தி செயலறிக்கையும் மாநகரசபை முதல்வரினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாநகர முதல்வரின் உலக சிறுவர் தின செய்தியும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,

ஒரு வார காலத்திற்கு சிறுவர்களிடம் இருந்து கருத்துகளைப்பெறுவதற்காக இந்த ஆலோசனைப்பெட்டிகள் வழங்கப்படுகின்றன. இது ஓரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகவும் சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் காத்திரமான ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

saravana batti யுனிசேபின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர் சிறுவர் நேய நகராக மாறுகின்றதுமட்டக்களப்பு மாநகர சபை என்ற வகையில் நாங்கள் உங்கள் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் இந்த மாநகர சபையின் ஆளுகைப் பிரதேசத்தை நாட்டின் முதலாவது சிறுவர் நேயமிக்க ஆளுகைப் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு நாம் உறுதியாக இருக்கிறோம். இந்த
உன்னதமான முயற்சியில் நாங்கள் யுனிசெப் அமைப்புடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். உலக சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்கு மாநகர ஆளுகைப் பிரதேசத்தில் பல நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு மாநகர சபை திட்டமிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை என்ற வகையில் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பானதும், அனைவரையும் உள்வாங்குகின்றதும், ஆரோக்கியமான மற்றும் பசுமையானதுமான மட்டக்களப்பை உருவாக்க கடமைப்பட்டுள்ளோம். சிறுவர்களே எமது எதிர்காலம். ஆகவே, எமது சமூக கடமைகளின் போது சிறுவர்களின் நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்திச் செயற்படுவதற்கு மட்டக்களப்பு நகராட்சியுடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு எங்கள் சமுதாயம், அபிவிருத்தி பங்காளிகள்,
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிட்கு அழைப்பு விடுக்கின்றேன்.

நீங்கள் கூறும் விடயங்களை செவிமடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதுடன், இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்பதன் மூலமும் உங்கள் “பெறுமதிமிக்க கருத்துக்களை” பகிர்ந்துகொள்வதன் மூலமும் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.