யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு…..? கோ.ரூபகாந்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை செலவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது . ஆனால் கடந்த ஆட்சியிலும், மைத்திரி- ரணில் ஆட்சியிலும் தமிழர் வாழ்ந்த பூர்வீக கிராமங்கள் பல அழிவடைந்துமக்கள் அவற்றை மக்கள்  கைவிட்டுச் செல்லும் நிலையில் காணப்படுகின்றது.

இந்தநிலை வடக்கின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வவுனியாவில் கொஞ்சம் அதிகம் என்றே கூறலாம். குறிப்பாக வீமன்கல், வெடிவைத்தகல், புதுவிளாங்குளம் என பல கிராமங்களைக் கூறலாம். இவ்வாறு இக்கிராமங்களில் மக்கள் குடியேறாமைக்கு காரணம் என்ன….? இவை அழிவடைந்து செல்லும் நிலை ஏன் வந்தது என்பன தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது.

வவுனியாவில் 200 வருடங்களுக்கு மேல் பழமையான புதுவிளாங்குளம் கிராமம் தற்போது அழிவடைந்து மக்கள் வாழ்ந்த இடம் என்ற நிலையில் இருந்து மறைந்து செல்லும் நிலையில் உள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் ஒரு பரம்பரைக்குரிய 25 குடும்பங்கள் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் ஆலயத்தை அண்டியதாக உள்ள இக் கிராமம் விவசாயப் பிரதேசமாகும். முன்னர் பாடசாலை, சிவன் ஆலயம், சனசமூகநிலையம், அழகான கல்வீடுகள், விளைச்சல் தரும் வயல்கள் என்பவற்றைக் கொண்டு கம்பீரமாக காட்சியளித்த இந்தக் கிராமம் தற்போது பற்றைக்காடாகவும், போரின் சாட்சியாகவும் கண்முன்னே நிற்கின்றது.IMG 5927 யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு.....? கோ.ரூபகாந்

சேதமடைந்த சிவன் ஆலயமும், சிதைவடைந்த கட்டடம் ஒன்றின் இடிபாடும் மட்டுமே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஒரே சாட்சி. ஏனைய கட்டடங்களின் அத்திவாரங்களை கூட தேடி கண்டுபிடிக்க முடியாத நிலையில் போரின் அவலத்தை இப்பிரதேசம் நேரடியாக சந்தித்துள்ளது.

இப்பகுதியில் குடியிருந்த மக்கள் 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர்.

2002 இல் சாமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது 5 வருடங்களின் பின் இம் மக்கள் மீண்டும் சொந்த இடம் வந்து குடியேறினர். அவர்களின் வாழ்வில் மீண்டும் இடம்பெயர்வு ஏற்பட்டது.

இறுதி யுத்தம் காரணமாக இப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்து முள்ளியவாய்கால் வரை சென்று மீண்டும் வவுனியா வந்தனர். இதன்போது அவர்களது வாழிடங்கள் பற்றைக்காடுகளாக மாறியிருந்ததுடன், அப்பகுதியில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

இதனால் அங்கு சென்று குடியேறுவதை தவிர்த்த இக் கிராம மக்கள் தற்போது கனகராயன்குளம், மன்னகுளம், வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் வேறு காணிகளைப் பெற்றும், உறவினர்கள், நண்பர்கள் காணிகளிலும் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த கிராமம் தற்போது அழிந்து போகும் நிலையில் உள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் இப்பகுதி விடுதலைப்புலிகளினதும், இராணுவத்தினரதும் முன்னரங்க காவல் நிலைகளாக இருந்தது. இதன்போது முன்னரங்க காவல் நிலைகள் மக்களது வீடுகள், வயல் நிலங்களை ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தது. அவை கூட இன்று வரை முழுமையாக அகற்றப்படாத நிலையிலேயே உள்ளது. இப்பகுதியில் வசித்த குடும்பங்கள் மீள்குடியயேறுவதாக இருந்தால் சிறுவர்கள் கல்வி கற்பதற்காக பாடசாலை தேவை. ஆனால் முன்னர் தரம் 5 வரை இருந்த பாடசாலை கூட தற்போது இருந்த இடம் தெரியாது இருக்கின்றது.

மேலும், இப் பகுதிக்கான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் வீதிகள் கூட சீராக இல்லை. இதனால் தமது பிள்ளைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் என்பவற்றை கவனத்தில் கொண்டு இக் கிராமத்தில் மக்கள் சென்று குடியேறுவதை தவிர்த்து வருகின்றனர்.IMG 5972 யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு.....? கோ.ரூபகாந்

இக்கிராமத்திற்கு செழிப்பை ஊட்டும் வகையில் புதுவிளாங்குளம் குளம் உள்ளதுடன் அதன் கீழ் சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும் காணப்படுகின்றது. 2005 ஆம் ஆண்டு நியாப் திட்டத்தின் கீழ் இக்குளம் புனரமைக்கப்பட்டிருந்தது.

காட்டு யானைகள், மழை போன்றவற்றினால் இதன் குளக்கட்டுப் பகுதிகள் சேதமடைந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வடக்கின் வசந்தம் திட்த்தின் கீழ் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றிருந்தது. ஓப்பந்தகாரர் சீராக வேலை செய்யாமையால் அதிக நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததுடன், குளத்தின் வான்பகுதி, கட்டுப்பகுதி என்பனவும் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டி நிலையில் இருந்தது. இதன்பின் குளத்தில் சிறியளவில் திருத்த வேலைகள் இடம்பெற்று  ஏறத்தாழ 150 ஏக்கரில் பெரும்போகமும், 50 ஏக்கரில் சிறுபோகமும் செய்கை பண்ணப்படுகின்றது. இக்குளத்தை சரியான வகையில் புனரமைத்து பராமரித்தால் தரிசு நிலமாக உள்ள சில நிலப்பகுதிகளையும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என இக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதிக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் இப்பகுதியில் மக்களை குடியேற்ற வேண்டும் என்ற அக்கறை அற்றவர்களாக இருப்பதாலும், இக்கிராமத்திற்கான அடிப்படை வசதிகள் அற்ற தன்மையுமே இக்கிராமம் அழிவடைவதற்கு காரணம் என்கின்றனர் ஊர் மக்கள்.

தாம் தமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய தற்போது வருகின்ற போதும் இங்குள்ள நிலமையே எம்மை இங்கு குடியிருக்க அனுமதிக்கவில்லை. எமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்படும் பட்சத்தில் வளம்மிக்க தமது மண்ணில் மீண்டும் குடியேறி வாழ விரும்புவதாகவே மக்கள் கூறுகின்றனர்.IMG 7129 யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு.....? கோ.ரூபகாந்

தமது பரம்பரை பரம்பரையான கிராமத்தை அழிவில் இருந்து காக்க கிராம மக்களும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்.

தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் கூட, அழிவடைந்து செல்லும் கிராமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அழிவடையும் தமிழ் கிராமங்களின் பட்டியல் நீண்டே செல்கின்றது.

நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறுகின்ற போதும் அவை சீராக பங்கிடப்படாமையும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் அபிவிருத்தி திட்டங்களை ஒதுக்குவதன் மூலமும் இன்று பல பகுதிகளில் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கஸ்ரப்படும் நிலை உருவாகியுள்ளதுடன், அந்தக் கிராமங்களை கைவிட்டுச் செல்லும் நிலையும் உருவாகி வருகிறது. அந்த வரிசையிலேயே புதுவிளாங்குளம் கிராமம் கூட உள்ளது.

எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி அபிவிருத்திகளையும், வளங்கைளையும் சீராக பங்கீடு செய்து அழிவடையும் தமிழ் கிராமங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.