Tamil News
Home செய்திகள் யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பீடங்கள் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு சமர்பிப்பு

யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பீடங்கள் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு சமர்பிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் இன்று  இடம்பெற்ற பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்தவைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே இன்றைய பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தலைமையிலும், சித்தவைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் சு. மோகனதாஸ் தலைமையிலும் பேரவையினால் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

அந்தக் குழுக்கள், பல்வேறு கள ஆய்வுகள், சந்திப்புகளின் முடிவில் தங்கள் சிபாரிசுகள் மற்றும் திட்ட முன் மொழிவுகளை இன்று இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தன. அவற்றை இம்மாதம் இடம்பெறவுள்ள விசேட மூதவை (செனற்) கூட்டமொன்றில் முன்வைத்த பின்,  மூதவையின் சிபார்சுடன் விசேட பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து, பேரவை அங்கீகாரத்துடன் பீடங்களைத் தரமுயர்த்துவதற்கான வேண்டுகையைப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version