யாழ்.நுாலக எரிப்பு:’அறிவு சுதந்திரத்தை அழிப்பது, ஓர் இனவழிப்போடு மனித குலத்தை அழிப்பதுமாகும்’

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்  40ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம் வரை மாறாது உள்ளது.

இந்நிலையில், யாழ் நுாலகம் சிறீலங்கா அரசால் எரிக்கப்பட்டமை குறித்து, சைவ சித்தாந்த பெருமன்றத் தலைவர் முனைவர் நல்லுார் சா. சரவணன் (தமிழ் நாடு) இலக்கு இணைய தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில்,

“நுால்கள் என்பவை ஒரு மனிதனுடைய அறிவை, அதன் தரத்தை உலகிற்கு வழங்கக்கூடியவை. அதே நேரத்தில் அந்த நுால்கள் எழுதப்பட்ட முறை, அவற்றை எழுதி வாழ்கின்ற இனம், அதன் அடிப்படையில் அந்த நுால்கள் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றன.

இப்படிப்பட்ட நுால்களை வரலாற்று நீட்சியில் தொகுத்து வைத்திருக்கின்ற, அதை மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு பெரிய நிறுவனம், ஆவணம் என்று கூறினால் அது நுாலகங்கள்தான்.

எனவே நுாலக வரிசையில் உகத்தரம் வாய்ந்த தமிழினத்தின் தரவுகளை பல காலங்களுக்குரிய, தொன்மை தொடங்கி சம காலம் வரையிலான படைப்புக்களை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வந்தது யாழ் நுாலகம்.

தமிழினத்தின், குறிப்பாக இலங்கை சார்ந்து வாழுகின்ற அனைத்து மக்களின் அறிவு எல்லையாக திகழ்ந்த யாழ் நுாலக எரிப்பு என்பது, முதலில் அறிவை போக்குகின்ற அல்லது அழிக்கின்ற செயற்பாடாக இருந்தது.

பொதுவாக நுால்களை தத்துவ மரபில் கடவுள் எழுதினார்,அல்லது கடவுள் அருளினார் என்று கூறுவார்கள். அதற்கு முக்கிய காரணம் அந்த நுால்கள் அழிவு பட்டுவிடக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை நடவடிக்கைதான்.

அப்படிப்பட்ட, கடவுள் நிலையோடு சேர்த்து கூறுகின்ற நுால்கள் இருக்கின்றது என்றால், அது காலப் பழமையையும் தரமான தகுதியையும் கொண்டிருக்கின்றது என்றுதான் திருவாசகத்தைப் பேசினார்கள்.

 இந்நிலையில், யாழ் நுாலக எரிப்பினுடைய நோக்கம், ஒரு தொலை நோக்கும் மிகத் தொன்மையான ஒன்றை வேறோடு கிள்ளி எறிகின்ற ஓர் முன் நிலையுமாகும்.

அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற, நுாலக எரிப்புக்குறிய ஓரு வேலை, அடுத்த கட்டமாகத் தொடர்ந்து இன்று வரையில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி சார்ந்த ஓர் நீட்சியில், பயில்கின்ற மாணவர்களை தமிழினத்திற்கு மாற்றாக அதிகமாக  அந்தக் கல்வியை பயில்வதற்கு சலுகைகளோடு இணைக்கின்றார்கள்.

அந்த வகையில் இந்த யாழ் நுாலகத்தை எரித்தவர்கள், அறிவுலகத்தில் இருந்து மனிதர்களை விலக்குவதற்கான வேலையை தொடர்ந்து செய்து, யாழ் நுாலக எரிப்பை மனித அழிவு எரிப்பாக தொடர்ந்து  மேற்கொண்டு   செயற்படுத்தி வருகின்றார்கள்.

அப்படி செயற்படுத்தி வருகின்றவர்களுடைய மிக முக்கியமான ஓர் அடிப்படையைப் பற்றி நாம் உணர வேண்டும். அதாவது, மனிதன் அரசியல் உரிமை, சுதந்திரம் இல்லாமல் வாழ்வது ஓர் வகை. ஆனால் அறிவு சுதந்திரமை் என்பதை காட்டுபவை,பலதரப்பட்ட அறிவுத் தன்மைகளை பதிவாகக் கொண்டுள்ள  தன்மை.

இவ்வாறான அறிவு சுதந்திரத்தை அழிப்பது, ஓர் இனவழிப்பை மேற்கொள்வது மட்டுமல்ல மனித குலத்தை அழிப்பதுமாகும். இந்த எச்சரிக்கையை ஓரு இனத்தன்மையோடு மட்டுமல்லாமல், மனித குல சுதந்திரத்திற்கு ஓர் அடிமைத்தனமாக யாழ்.நுாலக எரிப்பினுடைய அடையாளத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்”. என்று தெரிவித்துள்ளார்.